vi
'வஞ்சம்' கதை விஷயமும் அப்படித்தான். அறிவும் ஆராய்ச்சியும் மிக வேகமாக வளர்ந்துவிட்ட இக்காலத்திலும் அக் கதையில் வருவது போன்ற செயல்களை நம்புகிறவர்கள்- இந்த நாட்டில் மட்டுமல்ல உலகின் பல பகுதிகளிலும்-அதிகமாகத் தான் இருக்கிறார்கள். மக்களிடையே உயிரோடிருக்கும் எண்ணங்களை எழுத்திலே பிடித்து வைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?
'வஞ்சம்,' 'நம்பிக்கை' ஆகியவை 'அமுதசுரபி'யிலும், 'தெளிவு' 'சக்தியுள்ள தெய்வம்', 'நல்ல முத்து', 'விண்ணும் மண்ணும்' ஆகியவை 'ஹனுமான்'இதழ்களிலும், 'ஞானோதயம்' 'கலைக்கதிர்' பத்திரிகையிலும், 'இன்பம்' 'சிவாஜி'யிலும் பிரசுரமாயின. என் கதைகளைப் பிரசுரித்து எனக்கு ஊக்கமளித்த பத்திரிகை ஆசிரியர்களுக்கு எனது நன்றி.
'வல்லிக்கண்ணன் கதைகள்’ எனும் இத் தொகுப்பை சிறப்பாக வெளியிட முன்வந்த பதிப்பகத்தாருக்கு எனது இதயப் பூர்வமான நன்றி. இதை உருவாக்குவதில் மிகுந்த ஆர்வமும் அக்கறையும் காட்டிய எனது அருமை நண்பர் திரு.எம். கே. சென்னியப்பன் அவர்களுக்கு என் நன்றி என்றும் உண்டு. இத் தொகுதி அழகாக வெளிவருவதற்காகத் தீவிரமாய் ஒத்துழைத்த 'லாயல் பிரஸ்' அதிபர் திரு.கே.நடேச முதலியார் அவர்களுக்கும் என் அன்பும் கன்றியும் உரியன.
ரசிக அன்பர்களுக்கு 'ஒரு வார்த்தை' எனது கதைக் கலையின் பூரணப் பண்புகளும் இந்த ஒரு சிறு தொகுதியில் அடங்கி விடவில்லை. இதைப் போல் இன்னும் பல தொகுதிகள் வெளி வந்தால் தான் எனது கதைகளின் முழுத்தன்மையும் புலனாகும், இப்போதைக்கு இது ஒரு 'அறிமுகம்'; எனது கதைப் பூங்காவுக்கு ஒரு சிறு வாசல். என்றாலும், இத்தொகுதி உங்களுக்கு ஏமாற்றம் அளிக்காது என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
திருவல்லிக்கேணி,
14 மே 1954.
வல்லிக்கண்ணன்