46
சடுகுடு ஆட்டம்
என்று விரும்புகின்ற ஆட்டக்காரர்களுக்காக, ஒரு சில குறிப்புக்களையும் தந்திருக்கிறோம். ஆடும் நேரத்தில் இக்கருத்துக்களை நடைமுறைக்கு கொண்டுவர அவர்கள் முயற்சித்தால், திறமை மிகுவதுடன், பெருமையும் உயரும் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றோம்.
பாடிச் செல்பவருக்குரிய தகுதிகள்
1. கபாடி கபாடி என்று பாடிச் செல்பவருக்கு தேக பலம், சுறுசுறுப்பு, விறுவிறுப்பு முதலில் தேவைப்படும் திறன் நுணுக்கங்களாகும்.
2. உடலில் விறுவிறுப்பு மட்டுமல்லாது, மனோ நிலையிலும் அதே சுறுசுறுப்பு கட்டாயமாக இருக்க வேண்டும்.
3. திடகாத்திரமான உடலும், நடைமுறையை யூகித்து உணர்கின்ற மனமும், காக்கையின் வேகப் பார்வை அமைப்பும், அதாவது காக்கை ஒரிடத்தில் அமர்ந்திருக்கும் பொழுதே, பல இடங்களையும் சுற்றி சுற்றிப் பார்த்து எதற்கும் தயாராக பறந்து செல்ல இருப்பது போன்ற தயார் நிலையில், பாடிச் செல்பவர் எதிர்க் குழுவினரின் பகுதியில் இருக்கும்போது நின்று கொண்டிருக்க வேண்டும்.
4. கால் இயக்கம் (Foot Work) என்பது மிகவும் முக்கியமான திறனாகும். சமநிலை இழக்காமல் பாடிக்கொண்டே போவது, உடனேதாண்டிக் குதிப்பது, துள்ளித் திரும்புவது, காலை நீட்டி எட்டி உதைப்பது, கையை நீட்டித் தொடுவது, தாவி விழுவது போன்ற செய்கைகளுக்கு எல்லாம், கால் இயக்கம்தான் அடிப்படையாகும்.