உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

29


ஆண்களின் ஆர்வம் மேலோங்க, ஆட்டம் சீரோங்க வளர்ச்சியுற்றதின் காரணமாக, பெண்களிடையிலும் கபாடி ஆட்டம் பிரபலமாக வளரத் தொடங்கியது. அவர்கள் ஆர்வத்தை ஒரு சிறிதும் குறைத்துவிடக்கூடாது என்று நிறை மனம் கொண்ட அதிகாரிகள் பலர், 1935 ஆம் ஆண்டு கல்கத்தாவில் தேசிய போட்டிகள் (National Championship) நடைபெற்றபொழுது, பெண்களுக்காகவும் அங்கே போட்டிகளை நடத்தினர்.

ஆண் பெண் என்று பொது மக்களிடையே நடத்தி வந்த நிலையில், மேலும் முன்றேற்றம் பெருகியது. பள்ளிகளுக்கு இடையில் போட்டிகள் நடைபெற்றது போலவே, பல்கலைக் கழகங்களுக்கிடையிலும் போட்டிகள் நடத்தப்பெற்றன. 1961 ஆம் ஆண்டில் இருந்து பல்கலைக் கழகங்கள் தமது விளையாட்டுப் பட்டியலில் கபாடி ஆட்டத்தையும் இணைத்து பெருமை சேர்த்துத் தந்தது.

1957 ஆம் ஆண்டு, இரஷ்யாவில் உள்ள மாஸ்கோ நகரில் நடத்தப்பெறும் உலக இளைஞர் விளையாட்டு விழாவில் கபாடி ஆட்டத்தில் காட்சிப் போட்டி நடத்திட வாய்ப்பு பெற்றும், அங்கே போய் ஆடிக்காட்ட இயலாத நிலை எய்தியது. இந்த ஆட்டத்திற்கு மேலும் ஒரு துரதிர்ஷ்டம் என்றே நாம் கூறலாம்.

ஆனாலும், இதன் பெருமையை அறிந்த பிற நாட்டினர் கபாடி ஆட்டத்தை விளையாடி மகிழ்கின்றனர் எனும் சேதி, சிந்தை இனிக்கும் செய்தியாகத்தான் நம்மை மகிழ்விக்கிறது. பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், பர்மா, சிலோன், நேபாளம், மலேஷியா போன்ற நாடுகளில் கபாடி ஆட்டம் பெரிதும் மக்களால் விரும்பி ஆடப்பட்டு வருகிறது.