பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

183

கருத்தும் நமக்குப் பிடிக்காவிட்டாலும் அவர் சமய உணர்வுகளை மதிக்க வேண்டுமே தவிர எதிர்க்கக் கூடாது. சமயப் பொறையை ஒவ்வொருவரும் அணிகலனாகப் பூண்டிருக்க வேண்டும் என்பதே இஸ்லாத்தின் வேணவா.

ஒருவர் எந்தச் சமயத்தைச் சார்ந்தவராக இருந்த போதிலும் அவரது சமய நம்பிக்கைகளை, சட்டதிட்டங்களை, சடங்கு சம்பிரதாயங்களை எக்காரணம் கொண்டும் இழிவுபடுத்தவோ, குறைகூறவோ, குறைத்து மதிப்பிட்டுரைக்கவோ ஒரு முஸ்லிமுக்கு எந்த உரிமையும் இல்லை என இஸ்லாம் எடுத்தியம்புகிறது. இதற்குத் திருக்குர்ஆனில் மட்டுமல்ல, இறுதித் தூதர் நபிகள் நாயகம் (சல்) அவர்களின் வாழ்க்கையிலும் எத்தனையோ சான்றுகளைக் காணமுடிகிறது. அவற்றில் ஒரு நிகழ்ச்சி மேற்கூறிய கருத்துக்கு அரண் செய்வதாக அமைந்துள்ளது.

நபிகள் நாயகத்தின் நம்பிக்கைக்குரிய நற்றோழராக விளங்கியவர் அபூபக்ர் (ரலி) அவர்கள். அண்ணலாரின் வலக்கரமாக ஆரம்பம் முதல் இறுதிவரை திகழ்ந்தவர்.

ஒரு சமயம் அவர் கடைவீதிக்குச் சென்று, தனக்கு வேண்டிய சில சாமான்களை ஒரு யூதன் கடையில் வாங்க முற்பட்டார். கடைக்கார யூதர் தான் கூறிய விலையை உறுதிப்படுத்த யூதர்கள் வழக்கமாகக் கூறும் “உலகிலுள்ள அனைவரையும் விட மூஸா (அலை) அவர்களை சிறப்புடையவராக்கிய இறைவன் மீது ஆணையாக” என்ற வாக்கியத்தைக் கூறி, தான் சொன்ன விலையை அறுதியிட்டு உறுதிப்படுத்தும் வகையில் கூறினார். இவ்வாசகத்தைக் கேட்ட அபூபக்ர் (ரலி) அவர்களின் முகம் சினத்தால் சிவந்து விட்டது.

“உலகிலுள்ளவர்களிலெல்லாம் உயர்ந்த மூஸா” எனப் புகழ்கிறாயே, அப்படியானால் அனைத்து நபிமார்களுக்கும்