உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விவாகரத்து தேவைதானா.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

விவாக ரத்து உரிமை இருக்க வேண்டியதுதான். ஆனால், விவாக ரத்து பெறுவது சுலப சாத்தியமான காரியம் என்ற நிலைமையில் இருக்கக் கூடாது. விவாக ரத்து பெறுவதும் ஒரு தண்டனை போல எனும் எண்ணம் நிலவ வேண்டும். அவ்வாறானால், விவாக ரத்து கோருகிறவர்கள் வழக்குத் தொடருமுன், நன்றாக யோசிப்பார்கள். ஒரு தரத்துக்கு, இரண்டு தடவைகளாக ஆலோசிக்கும் போது கால தாமதம் ஏற்படும். காலம் பிணக்கைச் சரிக் கட்டி விடும். எண்ணிப் பார்க்கையில் தவறுகள் புலனாகி, பரஸ்பரம் மறந்து, மன்னிக்கவும் தயாராகி விடுவர். இப்படி ஒரு கட்சி உண்டு.

இத்தகைய உரிமைச் சட்டம்தான் ரஷ்யாவில் அமுலில் இருக்கிறது என்றொரு புத்தகத்தில் படித்தேன். விவாக ரத்து கோரி, குறிப்பிட்ட கோர்ட்டுக்குச் செல்வதற்கே தயங்குவார்களாம் தம்பதிகள். காரணம், அங்கு அவர்கள் செலுத்த வேண்டிய தொகை அவர்களை அச்சுறுத்தும் அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அப்படியே விவாகத்து ரத்து கோரி பதிவு செய்தாலும், உடனேயே ரத்து உரிமை அளிக்கப்படுவதில்லையாம். விசாரித்து, விவாக ரத்து செய்து கொள்ள வேண்டியது. அவசியம் என்று நினைக்கிறார்களா? ரத்து செய்யாமல் சமாதானமாக வாழ முடியாதா அவர்களால் என்றெல்லாம் பரிவுடன் வினவி, பின் இப்பிரச்னை பற்றி யோசிக்க ஒரு மாதம்—அல்லது ஏதோ ஒரு குறிப்பிட்ட காலம்—தவணை கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைப்பார்களாம். ரத்து செய்யாமல் தீராது என்று அவர்கள் திரும்பி வந்தால், நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகையைச் செலுத்தி விட்டு, உரிமைச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.