ஆண்டு விழாவின்போது அவரைப் பார்த்ததும், அவருடைய சொற்பொழிவைக் கேட்டதும் போதுமானது என்றே தோன்றியது
எனக்கு எந்த அறிஞரையும் பார்த்துப் பேச வேண்டும் என்ற ஆசை என்றுமே இருந்ததில்லை. இந்த சந்தர்ப்பத்தில் 1941ல் ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியாரையும் ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. தாமிரவர்ணி ஆற்றின் கரையை ஒட்டியுள்ள வண்ணார்பேட்டை என்ற ஊரில் டி.கே.சி. வசித்துவந்தார். அதே தெருவில் அவருடைய வீட்டுக்குப் பக்கத்தில்தான் புதுமைப்பித்தன் வீடும் இருந்தது. புதுமைப்பித்தனின் தந்தை சொக்கலிங்கம் பிள்ளை அங்கு வசித்தார். புதுமைப்பித்தன் சென்னையில் இருந்தார். டி.கே.சி. வீட்டில் வட்டத்தொட்டி கூட்டங்கள் நடத்தப்படுவது உண்டு. வீட்டின் முற்றத்தில் வட்டமாக ஒரு தொட்டிக்கட்டப்பட்டிருந்தது. டி.கே.சி.யும் அவரைக் காண வருகிறவர்களும் அதைச் சுற்றி அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். அதனால் அந்நிகழ்வுகளுக்கு வட்டத் தொட்டிக் கூட்டம் என்று பெயர் ஏற்பட்டிருந்தது. அங்கு கூடிப் பேசிப் பழகியவர்கள் வட்டத் தொட்டி நண்பர்கள், வட்டத் தொட்டியைச் சேர்ந்தவர்கள்’ என்ற குறிப்பிடப்பட்டார்கள். டி.கே.சி. கலைமகள், ஆனந்தவிகடன், சக்தி முதலிய பத்திரிகைகளில் கவிதை மற்றும் இலக்கியம் குறித்து ரசமான கட்டுரைகள் எழுதிவந்தார். ஆனந்த விகடன் தீபாவளி மலர்களில் அவர் எழுதிய கட்டுரைகள் வெகு சிறப்பானவை. அத்தகைய கட்டுரைகளை எல்லாம் தொகுத்து, டி.கே.சி.யின் அன்பர்கள் ‘புதுமைப் பதிப்பகம் - ரினைசான்ஸ் பப்ளிஷர்ஸ்-என்ற வெளியீட்டகத்தின் வழியாக நூல் வடிவில் வெளியிட்டிருந்தார்கள். 'இதய ஒலி என்பது அதன் பெயர். சிறந்த கட்டுரைத் தொகுப்பு. அப்பதிப்பகத்தினரே கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கவிதைகளையும் தொகுத்து மலரும் மாலையும் என்ற பெயரில் வெளியிட்டிருந்தார்கள். முக்கூடற்பள்ளு வையும் நல்ல பதிப்பாகப் பிரசுரித்திருந்தார்கள். 'இதய ஒலியைப் படித்துச் சுவைத்திருந்த நாங்கள் (நான் தி.க.சிவசங்கரன், வேலாயுதம் என்ற நண்பர் மூவரும்) - ஒருநாள் டி.கே.சி.யை சந்திப்பதற்காக வண்ணார்பேட்டை போனோம். திருநெல்வேலி டவுனிலிருந்து புறப்பட்டு, நடந்து ஜங்ஷன்