உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



காத்தலிங்கம்

'ஹ்விட்... ஹ்விட்டோ ஹீவிட்!"

இருளைக் கிழித்துக் கொண்டு கிளம்பியது அந்த ஒலி, கனத்த இருளின் கூரிய கதறல் போலும் ஒலித்தது அது. இரவின் அமைதியைக் குத்திக் குதற முயல்வது போல் எழுந்த கிறீச்சொலி அமானுஷ்யமானது அல்ல; மனித உதடுகள் எழுப்பிய சீழ்க்கைதான். குறுங்குடி ஊர்க்காரர்களுக்குப் பழக்கமான ஒலியே அது. இரவுப் பொழுதில்- வேளை கெட்ட வேளைகளில்: எல்லாம்.. அடைபட்டுக் கிடக்கும் வீட்டுக் கதவுகளையும், சாளரங்களையும் குடைந்து உட்புகுந்து, தூங்கியும் தூங்காமலும் இருக்கின்ற மனிதர்களின் காதுகளை அறுக்கும் அந்தச் சீட்டி.

'அவன்தான்- அந்த ராக்காடு வெட்டி- ஊர் சுற்றக் கிளம்பிவிட்டான்!”

'காத்தலிங்கம் பயல்தான். வேறே யாரு இப்படி ராத்திரி வேளையிலே திரிவாங்க?"

‘பேய் பிசாசு என்கிறாங்க. அவனைப் புடிச்சுது, இவனை அடிச்சுது என்கிறாங்க. இந்தக் காத்தலிங்கத்தை அதெல்லாம் ஒண்ணும் பண்ணாது போலிருக்கு!’