வரலாற்றை எழுத வேண்டியது முக்கியமாகும். அந்தப் பொறுப்பை வ.க.விடம் ஒப்படைக்க வேண்டும் என்று தி.க.சி. விரும்பினார். அவர் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நண்பர் பாலகிருஷ்ணன் அந்தப் பொறுப்பை என்னிடம் தந்தார்.
நான் இவ் வரலாற்றை எழுதுவதற்கு திரு. பாலகிருஷ்ணன் செய்துள்ள பலவகை உதவிகளும் என்றும் என் உள்ளத்தில் நிலைத்திருக்கக் கூடியவை. முக்கியமாக நா.பா.வின் குடும்பத்தாரிடமிருந்து 'தீபம்' இதழ்களின் தொகுதிகளை ஆண்டு வாரியாக, அநேக தடவைகளில் பெற்றுவந்து தந்ததும், பின்னர் பொறுப்புடன் அவற்றை அவர்களிடம் கொண்டு சேர்த்ததும் குறிப்பிடத்தக்கதாகும். எனது ஆய்வுக்குத் துணை செய்யும் வகையில் தீபம் தொகுதிகளை அன்புடன் கொடுத்து உதவிய நா.பா. குடும்பத்தினருக்கு என் நன்றி உரியது.
'மணிக்கொடி காலம்', 'சரஸ்வதி காலம்' என்று தடம் பதித்த இதழ்களின் வரலாற்றை எழுதுவதற்குக் களம் அமைத்துக் கொடுத்த 'தீபம்' இதழின் வரலாறும் சாதனைகளும் 'தீபம் யுகம்' என்ற பெயரில் வெளிவருகிறது. என் அன்புச் சகோதரர் தி.க. சிவசங்கரன்தான் பொருத்தமான இப்பெயரையம் தேர்ந்து சொன்னார். அவருக்கும் என் இதயப்பூர்வ நன்றி.
'தீபம்' இதழில் 'சரஸ்வதி காலம்', 'புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்', 'தமிழில் சிறு பத்திரிகைகள்' ஆகிய இலக்கியத் தொடர்களை எழுதுவதற்கு அமரர் நா.பா. அவர்களின் அன்பும் நட்பும் எனக்கு உந்து சக்திகளாக இருந்தன. அதே அளவுக்கு, இப்போது 'தீபம்' சிறப்புகளையும் நா.பா.வின் தனிச்சிறப்புகளையும் பற்றி எழுதுவதற்கு என் இனிய நண்பர் அ. நா. பாலகிருஷ்ணன் அவர்களின் உந்துதலும் உதவியும் துணை புரிந்துள்ளன. அவருக்கு என் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது இதர ஆய்வு நூல்களைப் போலவே, 'தீபம் யுகம்' குறித்த இந்த ஆய்வும் இலக்கியவாதிகள் மற்றும் ஆய்வு மாணவர்களின் வரவேற்பையும் பாராட்டுதலையும் பெறும் என நம்புகிறேன். அவர்களுக்கும் என் நன்றி உரியது.
வல்லிக்கண்ணன்