உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நினைத்ததை முடிக்காதவர் 47

அப்போது சிங்காரவேலு ஊரை விட்டுப் போய் பத்துப் பன்னிரண்டு வருடங்கள் ஆகியிருந்தது.

திடீரென்று எதிர்பாராத விதத்தில் மீண்டும் அவன் அவ்வூராருக்கு பரபரப்புச் செய்தி ஆனான். அதற்கு உதவியவர் உள்ளுர் பெரியபிள்ளை ஒருவர்தான்.

சிவபக்தரான அவர் அவ்வப்போது திருத்தல யாத்திரை போய் வருவது வழக்கம். இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மதுரை ராமேசுவரம், காசி என்று போய் வருவார்.

இம்முறை 'பாடல் பெற்ற புண்ணிய ஸ்தலங்கள்' அனைத்தையும் தரிசித்து விடுவது என்று அவர் காவேரிக் கரையோர ஊர்களுக்கெல்லாம் போனார். திரும்பி வந்தவர் திருத்தலப் பெருமைகளை அளப்பதற்கு முன்னதாக அவசரம் அவசரமாக, 'ஐயா, நம்ம சிங்காரவேலுவை நான் பார்த்தேனே!' என்று ஒலிபரப்பினார்.

ஆங், அப்படியா?... எங்கே. பார்த்தீக?... என்ன செய்துக்கிட்டிருக்கான் அவன்? இப்ப எப்படி இருக்கான்?... நாடகமெல்லாம் போடுறானாமா?

ஊராரின் 'அறியும் அவா' பலப்பல கேள்விகளாக வெடித்தது. . - .

'எல்லாத்தையும் விவரமாச் சொல்றேன் கேளுங்க' என்று லெக்சரடித்தார் அவர்.

பல ஊர்களுக்கும் போய்விட்டு அந்த ஊருக்கும் வந்தார். 'ஊர் பேரு சட்டுனு நினைவுக்கு வரலே. பெரிய டவுணு இல்லே. சுமாரான ஊருதான். ஆனால் கோயில் பெரிசு. நான் கோயிலுக்குப் போயி சாமி தரிசனம் பண்ணிப் போட்டு வெளியே வந்தேன். ரதவீதியிலே எடுப்பா ஒரு ஒட்டலு இருந்தது. சரி, இங்கேயே சாப்பாட்டை முடிச்சுக்கிடலாமேன்னு நுழைஞ்சேன்.

கல்லாவிலே இருந்தவரு என்னையே முறைக்க மாதிரி பார்த்துக்கிட்டிருந்தாரு. சட்டுனு எழுந்திருச்சு நின்னு கும்பிட்டபடி, என்ன சார்வாள், ஏது இந்தப் பக்கமின்னு விசாரிச்சாரு. சிரிச்ச முகமும் சிவகளையுமா இருந்த அவரை இதுக்கு முன்னே பார்த்ததா எனக்கு ஞாபகமில்லே. திகைச்சு நின்னேன். 'என்ன சார்வாள், என்னை தெரியலியா?" கொம்பங்குளம் சிங்காரவேலுயில்லியா!' என்கவும் எனக்கு ஒரே ஆச்சரியமாயிட்டுது.

'அடப் பாவி, நீயா! இங்கேயா இருக்கே?'ன்னு கத்திப்போட்டேன். ஏன்டே சொல்லாம, புரையாம ஊரைவிட்டு