உள்ளுர் ஹீரோ 23
விசித்திரமான தலை முடிச் சிங்களிப்புகள். இவற்றோடு சிங்காரம் ஜம்மென்று பவனி வருவதை சிவபுரம்காரர்கள் கண்டு ரசித்திருக்கிறார்கள்.
பண்ணையார் ஒரு மோட்டார் பைக் வாங்கினார். அதில் எடுப்பாக அமர்ந்து வேகமாகப் போய் வந்தார். "சினிமாவிலே மோட்டார் பைக் காட்சிகளில் நடிக்க வேண்டியிருக்கும். அதுக்காக இப்பவே டிரெய்னிங்' என்று அவர் நண்பர்களிடம் சொன்னார். -
சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அவருக்கு ஆசை இருக்கிறது என்பது இது போன்ற அவரது பேச்சுக்களினால் அவ்வப்போது விளம்பரமாயிற்று.
சிங்காரம் அந்த ஊர் தியேட்டருக்கும், அருகில் உள்ள நகரத்தில் இருந்த தியேட்டர்களுக்கும் வருகிற எல்லாப்படங்களையும் பார்த்துவிடுவார். தனியாகப் போக மாட்டார். சில நண்பர்களையும் உடன் அழைத்துப் போவார். தாராளமாக காப்பி டிபன் சப்ளை பண்ணுவார்.
படம் பார்க்கிறபோதே, 'இவன் என்ன நடிக்கிறான், மொண்ணை மூஞ்சி! நானாக இருந்தால் இந்த இடத்திலே பிய்ச்சு உதறி இருப்பேன், தெரியுமா?... முண்டம், நடிக்கிறானாம் நடிப்பு. இப்படியா இஸ்பேட் ராஜா மாதிரி நிற்கிறது? சே, நான் என்றால் என்ன பண்ணுவேன் தெரியுமா?’ என்ற தன்மையில் தொன தொணப்பார். .
நண்பர்கள் அவருடைய சிநேகத்தை இழக்க விரும்பாத காரணத்தினாலே, சிங்காரம் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருப்பார்கள். 'ஆமா' 'அது சரிதான்’ என்று என்னவாவது சொல்லி வைப்பார்கள். - .
'நீங்க சினிமாவிலே நடிக்கத்தான் வேண்டும். ஜோரா ஆக்ட் பண்ணி, ஒரே படத்தில் ஸ்டார் ஆகிவிடுவிங்க!' என்று சொல்லி அவர் தலையில் ஐஸ் வைத்தார்கள் சில பேர்.
'நடிக்காமலா போகப்போறேன்பின்னே! பார்த்துக்கிட்டேயிருங்க. ஒருநாள் ஐயாவாள் சினிமா ஸ்டார் ஆகி ஜொலிக்கப் போறது. நிச்சயம்’ என்று, ஒரு சுவால்மாதிரி அறிவித்தார் சிங்காரம்.
அதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபடவும் தவறவில்லை. யார் யாருக்கெல்லாமோ கடிதங்கள் எழுதினார். சென்னைக்கு சில தடவைகள் போய் வந்தார். சிவபுரம் பக்கம் வந்த திரைப்பட இயக்குநர் ஒருவருக்கு தடபுடலாக விருந்து உபசாரம் செய்தார்.