உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனம் செய்யும் வேலை! 37


எனினும், அவன் எல்லோர் கூடவும் சேர்ந்து தான் படுத்தான். தூங்கியும் போனான்.

இரவு கனத்தது. கிராமத்துச் சூழலில் அமைதி கனமாய் கவிந்து தொங்குவது போல் அழுத்தமாக இருந்தது.

வெளியே ஒரு மரத்தில் ஆந்தை ஒன்று திடீரென்று பயங்கரமாய் அலறியது. அதைத் தொடர்ந்து இரண்டு பூனைகள், ஏற்ற இறக்கங்களோடு, நீளமாய் விகாரமாய், விசித்திரத் தொனியில் கத்தின.

அந்தக் கூச்சல் ஒன்றிருவரை விழிப்புற வைத்தது.

அப்போது தான் கோரமான அலறல் வீட்டினுள் எழுந்தது. உயிருக்கு மல்லாடுவது போல, அச்சத்தால் துடித்துக் கதறுவது மாதிரி.

எல்லோரும் திடுக்கிட்டு விழித்தார்கள். விளக்குகளை எரிய விட்டார்கள்.

காத்தமுத்து தான் அப்படிக் கத்தினான்.

அருகில் இருந்தவர் அவனை உலுக்கினார். அதற்குள் அவனே பதறி, உடல் நடுங்க, விழித்தெழுந்து உட்கார்ந்தான்.

அவன் தேகம் அதிகமாக நடுங்கிக் கொண்டிருந்தது. மிரள மிரள விழித்தான்.

பலரும் என்ன என்ன என்று தூண்டித் துருவ, அவன் ஞஞ்ஞ மிஞ்ஞத்தனம் பண்ணினான். 'ஏதோ சொப்பனம்' என்றான். 'வீடு இடிந்து விழுந்து, பெரிய கல்லு என் மேலே பட்டு, என்னை நசுக்கின மாதிரி... நிசமா நடப்பது போலவே இருந்தது. அது தான்' என்றான்.

'பையன் எங்கேயோ பயந்திருக்கான்' என்றார் ஒருவர்.

காத்தமுத்து மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. குறுகுறு என்று உட்கார்ந்திருந்தான். பிரமை பிடித்தவன் போல் ஒரு திக்கையே பார்த்தபடி.

எல்லோரும் விளக்குகளை அனைத்து விட்டுப் படுத்தார்கள். சிலர் தூங்கினார்கள். மற்றவர்களும் கண்களை மூடிக்கொண்டு கிறிக்கத்தில் ஆழ்ந்தார்கள். -

காத்தமுத்துவுக்கு உறக்கம் வரவில்லை. அவன் மனமே அவனை அரித்தது. விடிந்த பின் மற்றவர்கள் கேட்கக்கூடிய கேள்விகள், பேசக்கூடிய கேலிகள் சொல்லக்கூடிய உபதேசங்கள் விதம்விதமாய் அவனது மனவெளியில் ஒலிக்க, அவனை