உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

விலையில், விறுவிறுப்பான முறையில், லட்சிய வேகத்தோடு செயலாற்றுவதற்காகப் புதிய பத்திரிகைகள் பல தோன்றின.

பிற்காலத்தில், தினமணி நாளிதழின் ஆசிரியராகி, அதன் பின்னர் சொந்தமாக தினசரி என்ற பத்திரிகை நடத்திப் புகழ் ஈட்டிய டி.எஸ். சொக்கலிங்கம், காலனா விலையில் காந்தி என்ற பத்திரிகையை ஆரம்பித்திருந்தார்.

தேசபக்தரும், சிறந்த பத்திரிகையாளருமாக வளர்ந்து புகழ் பெற்ற சங்கு சுப்பிரமணியன் சுதந்திரச் சங்கு என்ற வாரப் பத்திரிகையை நடத்தினார். அதன் விலையும் காலனா தான்.

கே. சீனிவாசன் ‘மணிக்கொடி’ என்ற பத்திரிகையைத் தொடங்கினார். பாண்டிச்சேரியில் மகாகவி சுப்பிரமணிய பாரதியுடன் சிறிது காலம் வாழ்ந்து, பாரதியின் தீவிர பக்தராக விளங்கிய, வ.ரா. என்று புகழ் பெற்றிருந்த வ. ராமஸ்வாமியும், டி.எஸ். சொக்கலிங்கமும் இம்முயற்சியில் அவருக்குத் துணை புரிந்து வந்தனர்.

இப்பத்திரிகைகளில் புதுமைப்பித்தனின் கதைகளும், கட்டுரைகளும் அவ்வப்போது பிரசுரம் பெற்றிருந்தன. அவருடைய புதிய பார்வையும், கதைகளுக்கு அவர் எடுத்துக்கொண்ட விஷயங்களின் தன்மையும், அவற்றை அவர் எழுத்தில் சித்திரித்த வேகமும், எண்ணத் துணிச்சலும், மிகுந்த வரவேற்பையும் பாராட்டுதலையும் பெற்றன. டி.எஸ். சொக்கலிங்கமும் வ.ரா.வும் அவற்றைப் பாராட்டி புதுமைப் பித்தனுக்குக் கடிதங்கள் எழுதினர். இவர்களுக்கிடையே கடிதத் தொடர்பு வளர்ந்து வந்தது.

சென்னை சேர வேண்டும் என்கிற தனது விருப்பத்தை புதுமைப்பித்தன் வ.ரா.வுக்கு எழுதினார். வரவேண்டாம் என்று தான் வ.ரா. எழுதிக் கொண்டிருந்தார். காரணம் பத்திரிகைக்கு நல்ல வரவேற்பு இருந்தது; பத்திரிகை நடத்தியவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் நிறையவே இருந்தன. என்றாலும், பொருளாதார பலம் தான் இல்லை. ஒவ்வொரு இதழையும் வெளியிடுவதற்கே அவர்கள் மிகுந்த சிரமங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இந்நிலையில் புதிதாக இன்னும் ஒருவரையும் சேர்த்துக் கொண்டு என்ன பண்ணுவது. எப்படி சமாளிப்பது என்ற யோசனைதான்.

ஆனாலும், புதுமைப்பித்தனுக்கு இருந்த உத்வேகமும், அவர் வாழ்க்கையில் குறுக்கிட்டிருந்த நெருக்கடியின் உந்துதலும் அவரை சென்னைக்கு இட்டுச் சென்றன. வ.ரா.வையும் சொக்கலிங்கத்தையும் அவர் சந்தித்தார். தங்களோடு சேர்ந்து அவரும் சிரமங்களை அனுபவிக்கட்டும் என்று அவர்களும் அவரை ஏற்றுத் தங்கள் குழுவில் சேர்த்துக் கொண்டார்கள்.