‘கோதமனது சித்தாந்த ஆராய்ச்சி புதுவிதமாக அமைந்தது. அவனுடைய மனசில் அகலிகை மாசு அற்றவளாகவே உலாவினாள். தனக்கே அருகதை இல்லை. சாபத்தீயை எழுப்பிய கோபமே தன்னை மாசுபடுத்திவிட்டது என்று கருதினான்’.
ராமனது பட்டாபிஷேகம் தடைப்பட்டது. அவன் காட்டுக்குப் போனான். ராமன் தம்பியும் தொடர்ந்தான். சீதையும் போய்விட்டாள். தசரதன் உயிரிழந்தான். இவற்றை அறிந்த அகலிகையின் மன வேதனைக்கு அளவே இல்லை.
முன்பு கற்சிலையாகிக் கிடந்தபோது மனசு இருண்டு கிடந்த மாதிரி ஆகிவிட்டது. ஆனால் மனப்பாரத்தின் பிரக்ஞை மட்டும் தாங்க முடியவில்லை.
அவள் கோதமனுடன் மிதிலைக்குப் போனாள். அங்கே அவர்களின் மகன் சதானந்தன் வசித்தான். மிதிலையிலும் அமைதி கிட்டவில்லை. இருவரும் பதினான்கு வருட காலம் எங்கெங்கே சுற்றித் திரிந்தார்கள். ராமன் திரும்பிவிடுவான், வாழ்வின் வசந்தகாலம் பிறக்கும் என்ற ஆசையோடு அயோத்திக்குத் திரும்பினார்கள்.
ராமனும் சீதையும் வந்துவிட்டார்கள். அகலிகையைக் காண இருவரும் ஆசிரமத்துக்கு வந்தார்கள்.
‘ராமனது நெற்றியில் அனுபவம் வாய்க்கால் வெட்டியிருந்தது சீதையின் பொலிவு அனுபவத்தால் பூத்திருந்தது. இருவர் சிரிப்பின் லயமும் மோஷலாகிரியை ஊட்டியது.’
சீதை தான் அனுபவித்தவற்றை எல்லாம் அகலிகையிடம் சொன்னாள். அக்கினி பிரவேசம் பற்றியும் சொன்னாள். அகலிகை துடித்து விட்டாள்.
‘அவர் கேட்டாரா? நீ ஏன் செய்தாய்?’ என்று கேட்டாள்.
‘அவர் கேட்டார், நான் செய்தேன்’ என்றாள் சீதை, அமைதியாக,
அவன் கேட்டானா? என்று கத்தினாள் அகலிகை. அகலிகைக்கு ஒரு நீதி, அவனுக்கு ஒரு நீதியா? ஏமாற்றா? கோதமன் சாபம் குடலோடு பிறந்த நியாயமா? உலகத்துக்கு நிருபிக்க வேண்டாமா? என்று கூறி, மெதுவாகச் சிரித்தாள் சீதை. . ‘உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா?’ உண்மையை உலகுக்கு நிரூபிக்க முடியுமா? என்றாள் அகலிகை.