'உயிர்ப்பின் மகாசக்தி தனிரகமான கட்டுரை. வர்ணனைப் பாங்கில் எழுதப்பட்டது. வியக்கும் மனம் வேண்டும், மாற வேண்டிய விஷயம் ஆகியவை காலஓட்டத்தில் மனிதர்களிடம் ஏற்பட்டுள்ள குறைபாடுகளைச் சிந்திக்கின்றன.
எனது இலங்கைச்சுற்றுலாவும், நடைப்பயணமும் தன் வரலாற்றுப்பதிவுகள். உண்மையான பெரியமனிதர் சிந்திக்கச் செய்யும் வரலாற்றுச் சித்திரம்.
வாழ்வின் ரசிகன் சுவாரசியமான ஒரு குணச்சித்திர விவரிப்பு. இன்றைய லட்சியவாதிகள் சுவைநிறைந்த சமூக விமர்சனக் கட்டுரை.
இப்படியான பல்சுவை விருந்தைக்கொண்ட இக்கட்டுரைத் தொகுப்பு மித்ர பதிப்பகத்தின் வெளியீடாகப் பிரசுரம் பெறுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் நிகழ்வு ஆகும்.
திரு. எஸ்.பொ. அவர்களும், மித்ரபதிப்பகமும் தமிழ் மொழிக்கும் இலக்கியத்துக்கும் அரும்பெரும் பணிகள் ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். "தமிழ் இலக்கியம் 2004 என்ற வரலாற்றுச் சிறப்புபெற்ற இலக்கியவிழாவை, சென்னையில் நிகழ்த்தியது அவர் களின் சாதனைகளில் ஒன்று ஆகும். அவ்விழாவின்போது மூத்த தமிழ் எழுத்தாளர்களை அழைத்து, கவுரவித்துச் சிறப்புச்செய்தது விசேஷ நிகழ்வு. அந்நிகழ்வில் என்னையும் பாராட்டிப் பெருமைப்படுத்திய எஸ்.பொ. அவர்களும், மித்ர பதிப்பகமும் இப்போது என் கட்டுரை களின் தொகுப்பை வெளியிட்டு என்னைப் பெருமைப்படுத்துவது எனக்குக் கிட்டிய நற்பேறு ஆகும். அவர்களுக்கு என் நன்றி உரியது.
- வல்லிக்கண்ணன்