இரண்டு பேர்
23
வாஸிலி தன்னிடம் தள்ளிவிட விரும்பிய குதிரை எப்படிப்பட்டது என்பது நிகிட்டாவுக்குத் தெரியும். அதற்காக ஏழு ரூபிள்கள் கொடுத்தாலே அதிகம் என்றுதான் தோன்றும். ஆனால் தான் அதை முதலாளியிடமிருந்து பெறுவதானால் தனது பேரில் இருபத்தைந்து ரூபிள்கள் பற்று எழுதப்படும். அப்புறம் அரை வருஷத்துக்கு அவன் பணம் எதுவுமே பெற முடியாமல் போய்விடும். ஆகையினால் நிகிட்டா சொன்னான்: ‘இல்லை. நீங்கள் எனக்குப் பதினைந்து ரூபிள்கள் கொடுத்தால் நல்லது. நான் குதிரைச் சந்தையிலேயே ஒன்றைப் பிடித்துக் கொள்வேன்.’
‘அது நல்ல குதிரை. உன்னுடைய நன்மையையும் என்னுடைய நலத்தையும் உத்தேசித்துத்தான் நான் சொல்கிறேன். மனச் சாட்சிக்குச் சரியானதையே நான் செய்வேன். யாருக்கும் தீமை புரிகிற மனிதன் அல்ல நான். நஷ்டம் என்னுடையதாகவே இருக்கட்டும். நான் மற்றவர்களைப்போல் இல்லை. இது உண்மை. நிஜமாகவே அது நல்ல குதிரை தான்’ என்று அவன் கத்தினான். வாடிக்கைக்காரர்களையும் வியாபாரிகளையும் வசப்படுத்த உபயோகிக்கும் குரலில்தான் இப்பொழுதும் பேசினான் அவன்.
‘ஆமாம். அது அப்படித்தான்!’ என்று பெருமூச்சு உயிர்த்தபடியே சொன்னான் நிகிட்டா. இனிமேல் கேட்டு ரசிப்பதற்கு எதுவுமில்லை என்ற உறுதி ஏற்படவும் அவன் மறுபடியும் காலரைத் தூக்கி விட்டான். உடனடியாகவே அது அவனுடைய காதுகளையும் முகத்தையும் மூடிக்கொண்டது.
சுமார் அரைமணி நேரம் அவர்கள் எதுவும் பேசாமலே முன்சென்றார்கள். காற்று பலமாக வீசியது.