இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இவ்விதம் நான் கனவில் அழுது கொண்டு இருக்கையில் என் முதுகில் 'பளீர்' என்று ஓர் அறை விழுந்தது. நான்,'இல்லை ஐயா--இல்லை ஐயா, என்று கத்திக்கொண்டே மெதுவாகக் கண் திறந்து பார்த்தேன். எனக்கு எதிரிலே சமையற்காரன் பனைமரம்போல் நிற்கக் கண்டேன்.
'அடே குப்பா, என்ன? ஓ வென்று கத்தினாய்! தடிப்பயலே,' என்றான் சமையற்காரன.
'ஒன்றும் இல்லை; உம்--கனவு--கண்டேன்.'
'சரி--அதற்காக நீ ஏன் குழந்தை போல் அழவேண்டும்?'
'உம்--பயந்தேன்,' என்று சொல்லிக்கொண்டு நான் என் தலையைச் சொறிய ஆரம்பித்தேன்.
32