78
வல்லிக்கண்ணன்
புலியூர்யடைந்து ஞானியாரடிகளைக் கண்டளவாளாவினர். மறுநாள் ஞானியார் மடத்தில் அடிகள் "முத்தி சாதனம்" என்று பேசினார்.
7.7.1907ல் மீண்டும் மடத்திலேயே அடிகள் “திருச்சிற்றம் பல விளக்கம்" என்று பேசினர். பேச்சினிறுதியில் சைவ சித்தாந்த மகா சமாஜம் அமைக்க உதவுமாறு அடிகள் வேண்டுகோள் விடுத்தார் கூட்டம் முடிவுற்றது. பின்னர் ஞானியாரடிகள் முன்னிலையில் அடிகளால் சைவசித்தாந்த மகாசமாஜம் நிறுவப்பட்டது. அப்போது அடிகளுடன் இருந்தவர்கள், ஞானியாரடிகள், தாசில்தார், பொன்னுசாமி பிள்ளை, ஓவர்சியர் சிங்காரவேல் முதலியார், வண்டிப்பாளையம் தமிழாசிரியர் கந்தசாமிமுதலியார் ஆகிய நால்வருமேயாவர். சமாசம் அமைக்க வேண்டும் என்னும் எண்ணத் தோற்றமும் அதற்கேற்ற முயற்சியும், முடிவும் திருவருளால் அடிகளின் ஆர்வ உள்ளத்தே எழுந்து உருப் பெற்றவை. சமாசத்தைத் தோற்றுவித்த தோடமையாது அதனை ஐந்தாண்டளவும் செயலாளராக அமர்ந்து சீரும் சிறப்பும் பெற வளர்த்து விட்டவரும் அடிகளாரேயாவர்.
சிவநெறியின் பெருமையை யாண்டும் பரப்பல் வேண்டுமென்ற அடிகள் உள்ளத்தே நாளும் வளர்ந்துவரும் உணர்ச்சியின் முடிவே “சைவ சித்தாந்த மகாசமாஜம்" என்னும் அமைப்பாக உருவெடுத்தது. சங்கம், கழகம், மன்றம் முதலிய சொற்களை விடுத்து அடிகள் “சமாஜம்" என்ற சொல்லை அமைக்கக் காரணம், வடநாட்டினர் இவ்வமைப்பினையறிய வேண்டும் என்பதற்கேயாம். நாளடைவில் இச்சமாசம் வட நாட்டிலும் ஆங்காங்குத் தோன்றிப் பணியாற்றவேண்டு மென்பதே அடிகளின் ஆர்வமாகும். இச்சமாசத்தினை எவர் தலைமையில் நிறுவது என்று அடிகள் கருதிவருகையில், பெருமலையை எண்ணின் இமயம் முன்னிற்பது போல் தவத்திரு ஞானியாரடிகளே நம் மடிகளின் மனத்திற்கு உகந்தவராயானார். அவரினுந் தக்கார் யாருளர்?
மறைமலையடிகள் வரலாறு