பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஞானியாரடிகள்
மறை. திருநாவுக்கரசு (1959)

திருக்கோவலூர் ஆதீனம், திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடாலயம் ஐந்தாம் பட்டம் ஸ்ரீல ஸ்ரீசிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய தேசிக சுவாமிகள் என்னும் ஞானியார் சுவாமிகள் தென் தமிழும் வடமொழியும் ஆய கடல்களைக் கடந்தவர்; பண்புகளால் ஆன்ற சான்றோர். நாவலருக்கு நாவலர்; அகத்துறவும் புறத்துறவும் பூண்ட புனிதர், காட்சிக்கினியர்; சிவவேடத்திற்கோர் இலக்கிய மாயமைந்த தோற்றத்தார், அருட்பொலிவினர். தீயோரும் போற்றும் செந்தன்மை கொண்டவர், தேளையும் விரும்பும் அன்பினர், முருகன் சேவடியில் உருகி நிற்கும் உயர்ந்தோர், புகழ் மொழிகளுக்கு அடங்குவதன்று; அவர் பெருமை.

நாள் முழுவதும் மாணவர்கட்குச் செந்தமிழ் கற்பிப்பதில் தணியாத வேட்கை கொண்டு அரும்பணியாற்றிக் கைம்மாறு பெருமாரியனையர், “பேசாத நாளெல்லாம். பிறவா நாளே” என்று கோட்பாடு கொண்ட இப்பிரான் தம் திருமடத்தும் செல்லு மிடங்களிலும் தவறாது மணிக்கணக்காக அருவிஎனப் பேருரை நிகழ்த்துவதே தம் வாழ்வின்பமெனக் கொண்டு தொண்டாற்றிய தூயோர் ஆவர்.

இப்பெருமானின் சிறப்பியல்களில் ஈடுபட்ட அடிகளார் சமாசம் தொடங்குவதற்கு முன் சில திங்களாக அவர்களோடு தொடர்ந்த கேண்மையுடையவராக இருந்தார். இடையிடையே திருப்பாதிரிப்புலியூர் சென்று தலைமையிலும், முன்னிலையிலும் பேசிப்பேசி அவர் பேரன்பையும் பெருமதிப்பையும் பெற்று முள்ளார். ஞானியார் அடிகளைப் பற்றி அடிகளின் 18.5.1905 நாட் குறிப்பு "திருப்பாதிரிப் புலியூர் மடம் அடைந்தேன். ஞானியாரைப் பார்த்தேன். அவர் என்பால் மிகவும் அன்பு கூர்ந்தார். அவர் நிறைந்த கல்வியாளர், குற்றமில்லா ஒழுக்கத்தினர்; நிறைந்த அன்பினர்" என்று கூறுகின்றது. இத்தகு நல்லோர் முன்னிலையில் அவர் வாழ்த்துடன் இசைவுடன் சமாசத்தைத் தொடங்குவது என்று முடிவு கொண்ட அடிகள் அக்கருத்தினை முன்கூட்டியே ஞானியார் அடிகட்கும் தம்மரிய நண்பர்கட்கும் கடிதம் வாயிலாக அறிவித்து 1907 ஜூலை 3ல் திருப்பாதிரிப்