உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

வல்லிக்கண்ணன்

தலங்கள் - திவ்வியப் பிரபந்தங்கள், இராமாயணத்திலுள்ள சிறப்புகள் என்றெல்லாம் மத பேதத்துக்கு சிறிதும் இடம் தராத வகையில் சமய வளர்ச்சி என்ற ஒரே குறிக்கோளுடன் பேசினார்; எழுதினார்; உதவிகள் செய்தார். அதே சமயம் தமிழ் மீது தனியாத காதல் கொண்டவராக தமிழ்ச்சங்கம், தமிழ்க்கல்லூரி என்று தமிழ் வளர்க்கும் அமைப்புகளை உருவாக்குவதில் தீவிரம் காட்டினார்.

1900மாவது ஆண்டு பாலவநத்தம் குறுநில (சமீந்தார்) மன்னரான பாண்டித்துரைத் தேவர் சென்னையிலிருந்து ஊர் திரும்பும் வழியில் திருப்பாதிரிப்புலியூர் சென்று ஞானியாரடிகளை தரிசித்தார். தேவர் தலைமையில் அடிகளார் தமிழின் தற்கால நிலை என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவின் போது "மதுரை மாநகரில் தேவரும் மற்ற செல்வர்களும் சேர்ந்து ஒரு தமிழ்ச் சங்கம் அமைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். தலைமை வகித்த பாண்டித்துரை தேவர் - தமது முடிவுரையில் தமது தமையன் பாஸ்கர சேதுபதி மன்னரிடம் கூறி, மதுரையில் தமிழ்ச் சங்கம் ஏற்படுத்த ஆவன புரிவதாக அங்கேயே அறிவித்தார்!

பின்னர் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்துக்கு வந்த பாஸ்கரசேதுபதி மன்னர் திருப்பாதிரிப்புலியூர் வந்தார். அடிகளார் ஆற்றும் ஒரு அற்புதமான சொற்பொழிவு நிகழ்த்தி... அதனிடையே மறவாமல் மதுரைத் தமிழ்ச் சங்கம் அமைய வேண்டிய அவசியத்தை வலியுறுத்திப்பேசினார்.

பாண்டித்துரைத் தேவர் போலவே மன்னர் சேதுபதியும், தமிழ்ச் சங்கம் அமைத்துத் தருவதாக ஒப்புதல் அளித்தார். இப்படி இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து, வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம் மதுரையில் தமிழ்ச் சங்கம் என்று இடைவிடாது அடிகளார் செய்த முயற்சியே மதுரைத் தமிழ்ச்சங்கம் உருவாகக் காரணமாக அமைந்தது. அது நான்காம் தமிழ்ச் சங்கம் என்று அனைவரும் போற்றும் வகையில் புகழ் பெற்றது!

மதுரை தமிழ்ச் சங்கம் - மாதந்தோறும் கூட்டம் நடத்துவதற்காக அமைக்கப்பட்ட சங்கமல்ல; தமிழ் வளர்க்க சேதுபதி கலாசாலையை உருவாக்கி, பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் என்னும் மூன்று பாடம், பட்டப் படிப்புகள் மூலம் தமிழ்ப் புலவர்களை உருவாக்கியது அது.