உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

வல்லிக்கண்ணன்

எவ்வளவு நன்றாயிருக்கும் என்று நான் எண்ணமிட்டுக் கொண்டிருந்தேன்.

விஷயம் என்னவென்றால், இந்த நாளில் நாமெல்லோரும் பிறருக்குப் போதனை செய்யவே தயாராயிருக்கிறோம். அந்தப் போதனையை நமது வாழ்க்கையில் கொண்டுவரத் தயாராயிருப்பதில்லை. மேற்படி சைவ சித்தாந்தப் பிரசங்கியை எடுத்துக்கொள்வோம். அவர் ஏன் சைவ சித்தாந்தத்தை ஹிட்லருக்குப் போதிக்க விரும்புகிறார்? நம் ஊரில் எத்தனையோ பேர் சைவ சித்தாந்தத்தைக் கரைத்துக் குடித்து விட்டிருக்கிறார்களே, அதன் பயன் என்ன? சைவ சித்தாந்தம் பிறந்த தமிழ்நாடு இன்று ஏன் அடிமை நாடாயிருக்கிறது? இங்கே ஏன் இவ்வளவு சாதி-மத-துவேஷங்கள் குடிகொண்டிருக்கின்றன? இந்நாட்டு ஜனங்கள் ஏன் அன்னிய பாஷை மோகத்தில் வீழ்ந்திருக்கிறார்கள்? இங்கே ஏன் இவ்வளவு வேஷதாரிகளும், வஞ்சகர்களும், தேசத் துரோகிகளும் இருக்கிறார்கள்? நம் ஊரில் நிலைமை இப்படி இருக்கும் போது, ஹிட்லருக்குச் சைவ சித்தாந்தத்தைப்போதிக்க மேற்படி பிரசங்கியார் இவ்வளவு கவலைப்படுவானேன்? இருக்கிறது; காரணம் இருக்கிறது. அடால்ப் ஹிட்லர் ஒருவேளை ஜயித்து, அதனால் பிரிட்டிஷ் சாம்ராஜய்த்துக்குக் கேடுவந்து, அதன் விளைவாகத் தம்முடைய பென்ஷனுக்கு ஆபத்து வந்துவிடப் போகிறதே என்று இந்தப் பிரசங்கிக்குக் கவலை! அந்தக் கவலையினால் தான் ஹிட்லருக்கே சைவ சித்தாந்தத்தைப் போதித்து விடலாமென்று அவர் ஆசைப்பட்டது. அதே காரணத்தினால்தான், சேம்பர்லினுக்கும் சர்ச்சிலுக்கும் அவர் சைவ சித்தாந்தத்தைப் போதிக்க ஆசைப்படவில்லை.

இம்மாதிரி எத்தனையோ சைவ சித்தாந்தப் பிரசங்கிகளை நாம் பார்த்திருக்கிறோம். அவர்கள் அன்பு மதமாகிய சைவ சித்தாந்தத்தைப்பற்றித் தேனொழுகப் பேசுவார்கள்.

"அன்பும் சிவமும் இரண்டென்பர்அறிவிலார்
அன்பே சிவமாவதாரு மறிகிலார்
அன்பே சிவமாவதாரு மறிந்தபின்
அன்பே சிவமா யமர்ந்திருந் தாரே"

என்ற திருமூலர்பாட்டைச் சொல்லி, "இம்மாதிரி அன்பே கடவுள் என்று போதிக்கும் மதம் உலகத்தில் உண்டோ?” என்று கேட்பார்கள். ஆனால் விபூதிக்குப் பதிலாக நாமத்தைப் போட்டுக் கொண்டு ஒருவர் வந்துவிட்டால்