பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

75


படுகிறது என்று ஒன்றை ஏற்க மறுப்பதோடு, எதையும் விமரிசன ரீதியாகப் பார்க்க வேண்டும் என்று வற்புறுத்துபவர்கள் இவர்கள். இப்படிப்பட்டவர்கள் சேர்ந்து கசடதபற வை உருவாக்கி இருக்கிறார்கள்.

சொந்த அல்லது வேற்றரசாங்கத்தின் பணம் ஏதும் கொல்லைப் புறமாக இவர்களுக்கு வந்திருக்கவில்லை. அல்லது பை கொழுத்துப் போன ஒருவருடைய இறுதிக் காலத்தியதே போன்ற ஆவலை நிறை வேற்றவோ, கேவலம் சுய விளம்பர நமைச்சலைத் தீர்த்துக் கொள்வதற்காகவோ கசடதபற வந்திருக்கவில்லை. மாறாக, சிந்திக்கிறவனுக்கு இன்றைய உலகம் விடும் அறைகூவல்களை ஏற்றுக்கொள்ள வந்திருக்கிறது. சமூகத்தின் கூட்டுப் பொறுப்பான கலாசாரத்தின் ஆழ அகலங்களை, ரகசிய அம்பலங்களை இலக்கியத்தில் காட்டக் கசடதபற வந்திருக்கிறது.’

புதிய எழுத்தாளர்கள், கவிஞர்கள், கட்டுரையாளர்களை வரவேற்கக் கசடதபற பெரிதும் விரும்பும். எதையும் செய்யுங்கள், ஆனால் இலக்கியமாகச் செய்யுங்கள் என்று மட்டுமே கசடதபற சொல்லும்.

இலக்கியத்தை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்களைப் பற்றிக் கவலை இல்லை. இலக்கிய ரொட்டியின் எந்தப் பகுதியில் வெண்ணெய் தடவப்பட்டிருக்கிறது என்று ஆராய்பவர்களைப் பற்றிக் கவலை இல்லை. இலக்கியத்தை வாழ்க்கையின் அனுபவப் பகிர்தலாக, முன்னோட்டமாகக் கருதுபவர்கள் எல்லோரையும் அழைக்கிறது கசடதபற"

-முதல் இதழில் பிரசுரமான இந்த அறிவிப்பு கசடதபற நண்பர்களின் நோக்கை நன்கு எடுத்துக்காட்டியது.

ஞானக்கூத்தன் எழுதிய தமிழை எங்கே நிறுத்தலாம் என்ற கவிதை சூடாகவே சில விஷயங்களைச் சொன்னது.

வேற்று நாட்டுச் சரக்குகளோடு
உள்ளூர்ச் சரக்கை ஒப்பிட்டால்
தலையில் தலையில் அடித்துக் கொண்டால் தேவலாம் போல இருக்கிறது
மோச மின்னும் போவதற்குள்ளே
வித்தைக்காரர் வர வேண்டும்;
வித்தை தெரிந்த எழுத்துக் கலைஞர்
விலகி நிற்கக் கூடாது.