திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எண்ணிக்கை (எண்ணாகமம்)/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

விக்கிமூலம் இலிருந்து
யூத வழிபாட்டுப் பொருள்கள். வரைபடம்: 1890.
==எண்ணிக்கை== அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

== تعداد == <بزرگ> 'قدرت 5 به 6' </ big> </ div>

அதிகாரம் 5[தொகு]

தூய்மையற்ற மக்கள்[தொகு]


1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2 தொழுநோயர், வெட்டையுள்ளோர், பிணத்தால் தீட்டுப்பட்டோர் அனைவரையும் பாளையத்துக்குப் புறம்பாக்குமாறு இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிடு.
3 மக்களிடையே நான் தங்கியிருக்கும் பாளையத்தை அவர்கள் தீட்டுப்படுத்தி விடாதபடி ஆணாயினும், பெண்ணாயினும் அவர்களைப் பாளையத்துக்குப் புறம்பாக்கிவிடுங்கள்.
4 இஸ்ரயேல் மக்கள் அவ்வாறே அவர்களைப் பாளையத்துக்குப் புறம்பே துரத்திவிட்டனர். ஆண்டவர் மோசேயிடம் சொன்னபடியே இஸ்ரயேலர் செய்தனர்.

தவறுகளுக்கான அபராதம்[தொகு]


5 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
6 இஸ்ரயேல் மக்களிடம் சொல்: மனிதர் ஆண்டவரை மீறிச் செய்யும் பாவங்களில் எதையும் ஓர் ஆணோ, பெண்ணோ செய்து குற்றவாளியானால்,
7 அவர்கள் தாங்கள் செய்த பாவத்தை அறிக்கையிட வேண்டும்; தீங்கிழைக்கப்பட்டவனுக்கு அத்துடன் ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்க வேண்டும்.
8 குற்ற ஈட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ள முறைஉறவினர் இல்லையெனில் அந்த குற்ற ஈட்டுத்தொகை ஆண்டவருக்கு, அதாவது குருவிடம் சேரும்; இது அவன் குற்ற நீக்கத்துக்காகச் செலுத்தும் ஈட்டுப்பலி; ஆட்டைத் தவிரச் சேரவேண்டியது. [*]
9 இஸ்ரயேல் மக்கள் குருவிடம் கொண்டு வரும் புனிதப் பொருள்கள் அனைத்திலும் உயர்த்திப் படைப்பவை அவனையே சேரும். 10 ஒவ்வொரு மனிதனின் புனிதப் பொருள்களும் அவனுக்குரியவை; ஆனால் அவன் குருவுக்குக் கொடுப்பது அவனையே சேரும்.

மனைவியரை ஐயுறும் கணவர்களின் வழக்குகள்[தொகு]


11 மேலும் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
12 இஸ்ரயேல் மக்களிடம் சொல்: ஒருவனின் மனைவி நெறி தவறி அவனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தால்,
13 வேறொருவன் அவளோடு படுத்து உடலுறவு கொள்ள, அது அவள் கணவனின் கண்களுக்கு மறைக்கப்பட்டு அவள் கறைப்பட்டிருந்தும் கண்டு பிடிக்கப்படாதிருந்து, அவள் தவறு செய்த நிலையிலேயே பிடிக்கப்படாமலிருந்தால்,
14 வெஞ்சினத்தின் ஆவி, கணவனை ஆட்கொண்டு தன்னையே கறைப்படுத்திவிட்ட மனைவியின் மேல் அவன் வெகுண்டழுந்தால் அல்லது வெஞ்சினத்தின் ஆவி அவனை ஆட்கொண்டு தன் மனைவி தன்னையே கறைபடுத்தாதிருந்தும் அவன் வெகுண்டெழுந்தால்,
15 அவன் தன் மனைவியை குருவின் முன் கொண்டு வரவேண்டும். அவளை முன்னிட்டுத் தேவைப்படும் பத்தில் ஒரு ஏப்பா வாற்கோதுமை உணவைப் படைக்க வேண்டும்; அவன் அதன் மேல் எண்ணெய் ஊற்றவோ தூபப்பொருள்கள் தூவவோ கூடாது. ஏனெனில் அது நினைவுபடுத்தும் உணவுப்படையல், அதாவது குற்றத்தை நினைவூட்டக்கூடிய சினத்தின் உணவுப்படையல்.


16 பின் குரு அவளைக் கூட்டிக் கொண்டு வந்து ஆண்டவர் முன் நிறுத்துவார்;
17 குரு ஒரு மண் பாத்திரத்தில் புனித நீர் எடுத்து, திருக்கூடாரத்தின் தரையில் இருந்து கொஞ்சம் துகள் எடுத்து நீரில் போடுவார்.
18 குரு அப்பெண்ணின் தலைமுடியைக் கலைத்துவிட்டு, வெஞ்சினத்தின் உணவுப் படையலாகிய நினைவுபடுத்தும் உணவுப்படையலை அவள் கைகளில் வைப்பார்; சாபத்தைக் கொண்டு வரும் கசப்பு நீரையும் குரு தன் கையில் வைத்திருப்பார்.
19 அதன் பின்னர் குரு அவளை ஆணையிடச் சொல்லிக் கூற வேண்டியது: "நீ உன் கணவனின் அதிகாரத்துக்கு உட்பட்டிருக்கும்போது வேறு எந்த மனிதனும் உன்னோடு படுக்காமலும், நீ ஒழுக்கக்கேட்டுக்கு உடன்படாமலுமிருந்தால் சாபங்களைக் கொண்டு வரும் இக்கசப்பு நீர் உன்னை ஒன்றுஞ் செய்யாது;
20 ஆனால் நீ உன் கணவனின் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்தும் நெறி தவறி, உன்னையே கறைப்படுத்தி, உன் கணவன் தவிர வேறொருவன் உன்னோடு படுத்திருக்க உடன்பட்டால்",
21 குரு அப்பெண்ணைச் சாப ஆணை இடச் சொல்லி அவளிடம், "ஆண்டவர் உன் தொடைகள் அழுகி விழவும் உன் வயிறு வீங்கவும் செய்து உன் மக்களிடையே உன்னை ஒரு சாபமாகவும், ஆணைக்கூற்றாகவும் ஆக்குவார்;
22 சாபத்தைக் கொண்டு வரும் இந்த நீர் உன் குடல்களில் இறங்கி உன் வயிற்றை வீங்கச் செய்து உன் தொடைகளை அழுகி விழச் செய்யட்டும்" என்பார். அதற்கு அப்பெண் "ஆமென், ஆமென்" என்பாள்.
23 பின்னர் குரு இச்சாபங்களை ஓர் ஏட்டில் எழுதிக் கசப்பு நீரால் அவற்றை அழித்து விடுவார்;
24 சாபத்தைக் கொண்டுவரும் அக் கசப்பு நீரை அப்பெண் குடிக்கச் செய்வார்; சாபத்தைக் கொண்டு வரும் அந்நீர் அவளுக்குள் சென்று கொடிய வேதனையை உண்டாக்கும்.
25 குரு வெஞ்சினத்தின் உணவுப்படையலைப் பெண்ணின் கையிலிருந்து வாங்கி அதை ஆண்டவர் முன்னிலையில் ஆரத்தியாகக் காட்டிப் பலிபீடத்துக்குக் கொண்டு வருவார்.
26 குரு அந்த உணவுப் படையிலிலிருந்து அதன் நினைவுப் பகுதியாக ஒரு கைப்பிடி எடுத்து அதனைப் பீடத்தின் மேல் எரித்து விடுவார்; இறுதியாக அப்பெண், அந்நீரைக் குடிக்கச் செய்வார்.
27 அவர் அவளை நீர் குடிக்கச் செய்யும்போது அவள் உண்மையிலேயே தன்னைக் கறைப்படுத்தித் தன் கணவனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்திருந்தால் சாபத்தைக் கொண்டுவரும் நீர் அவளுக்குள் போய் கொடிய வேதனையை உண்டாக்கும்; அவள் வயிறு வீங்கி, தொடைகள் அழுகிவிடும்; அவள் தன் மக்களிடையே ஒரு சாபமாக இருப்பாள்.
28 ஆனால், அப்பெண் கறைபடாது தூயவளாயிருந்தால் அவளுக்கு ஒரு கேடும் வராது; அவள் குழந்தையைக் கருத்தரிப்பாள்.


29 வெஞ்சினத்தின் வேளைகளில் இதுவே சட்டம்: அதாவது ஒரு மனைவி தன் கணவனின் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்தும் நெறிதவறித் தன்னையே கறைபடுத்தியிருந்தால்,
30 அல்லது வெஞ்சினத்தின் ஆவி ஒரு மனிதன் மேல் வந்து அவன் தன் மனைவி மேல் வெகுண்டெழுந்தால் அவன் அவளை ஆண்டவர் திருமுன் நிறுத்துவான்; குரு இச்சட்டத்தையெல்லாம் அவளிடம் செயல்படுத்துவார்.
31 ஆடவன் தன் குற்றப்பழி அற்றவனாவான்; பெண்ணோ தன் குற்றப்பழியைச் சுமப்பாள்.


குறிப்பு

[*] 5:5-8 = லேவி 6:1-7.


அதிகாரம் 6[தொகு]

நாசீர் விதிகள்[தொகு]


1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2 இஸ்ரயேல் மக்களிடம் சொல்: ஓர் ஆணோ பெண்ணோ தன்னை ஆண்டவருக்குத் தனிப்படுத்திச் சிறப்பான பொருத்தனையான நாசீர் [1] பொருத்தனை செய்து ஆண்டவருக்குத் தன்னை அர்ப்பணித்தால்,
3 திராட்சை இரசம், மது ஆகியவற்றை அவன் விலக்க வேண்டும்; திராட்சை இரசம், மது ஆகியவற்றின் காடியை அருந்தக் கூடாது. திராட்சைப்பழச் சாற்றைக் குடிக்கக் கூடாது. திராட்சைப் பழங்களையோ, வற்றலையோ உண்ணவும் கூடாது. [2]
4 பொருத்தனைக் காலம் முழுதும் திராட்சைக் கொடியிலிருந்து கிடைக்கும் எதையும், விதைகள், தோல்களைக் கூட, அவன் உண்ணக்கூடாது.


5 அர்ப்பணம் செய்துகொண்ட பொருத்தனைக் காலம் முழுதும் சவரக்கத்தி அவன் தலையில் படக்கூடாது; ஆண்டவருக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட காலம் முடியுமட்டும் அவன் தூய்மையுடன் இருப்பான்; அவன் தன் தலை முடியை நீளமாக வளர விடுவான்.


6 ஆண்டவருக்கென்று தன்னை அர்ப்பணித்துக்கொண்ட காலம் முழுதும் பிணத்தருகே அவன் போகக்கூடாது.
7 தன் தந்தை, தாய், சகோதரன், சகோதரி இறந்தால் கூட அவர்களுக்காகத் தன்னைத் தீட்டுப்படுத்தக்கூடாது; ஏனெனில் கடவுளுக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டதின் அடையாளம் அவன் தலையில் இருக்கிறது.
8 அர்ப்பண காலம் முழுதும் அவன் ஆண்டவருக்குத் தூய்மையாக இருப்பான்.


9 எவரேனும் திடீரென அவன் அருகே இறந்து, புனிதப்படுத்தப்பட்ட அவன் தலையைத் தீட்டுப்படுத்தினால் தூய்மைப்படுத்தும் நாளில் அவன் தன் தலையைச் சிரைத்துக் கொள்ள வேண்டும். ஏழாம் நாளில் அவன் அதைச் சிரைத்துக்கொள்வான்;
10 எட்டாம் நாளில் அவன் இரு காட்டுப் புறாக்களையோ, இரு மாடப்புறாக் குஞ்சுகளையோ சந்திப்புக் கூடாரநுழை வாயிலுக்கு குருவிடம் கொண்டு வர வேண்டும்.


11 குரு ஒன்றைப் பாவம் போக்கும் பலியாகவும், மற்றதை எரிபலியாகவும் ஒப்புக் கொடுப்பார்; பிணத்தை முன்னிட்டு அவன் பாவம்செய்துள்ளதால், அவனுக்காகக் கறைநீக்கம் செய்வார்; அதே நாளில் அவன் தலையையும் புனிதப்படுத்துவார்.
12 அவன் பொருத்தனை செய்த காலத்திற்காக மீண்டும் தன்னை ஆண்டவருக்கு அர்ப்பணிப்பான்; குற்றநீக்கப்பலிக்காக ஓராண்டு ஆட்டுக்கிடாய் ஒன்றைக் கொண்டு வருவான்; அவன் அர்ப்பண நிலை தீட்டுப்பட்டதால் கடந்துவிட்ட காலம் கணக்கில் வராது.


13 அர்ப்பண காலம் நிறைவுறும் போது நாசீருக்கான சட்டம் இதுவே: சந்திப்புக் கூடாரத்தின் நுழைவாயிலுக்கு அவன் கொண்டு வரப்படுவான்;
14 ஆண்டவருக்கு அவன் கொண்டு வரும் நேர்ச்சைப் பொருள்: பலிக்காகப் பழுதற்ற ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று, பாவ நீக்கப் பலிக்காகப் பழுதற்ற ஓராண்டு ஆட்டுக்குட்டி ஒன்று, நல்லுறவுப் பலிக்காகப் பழுதற்ற ஆட்டுக்கிடாய் ஒன்று,
15 புளிப்பற்ற அப்பம் ஒரு கூடை, எண்ணெயில் மெல்லிய மாவைப் பிசைந்து செய்த நெய்யப்பங்கள், எண்ணெய் தடவிப் புளிப்பற்ற மாவால் செய்த அடைகள், அவற்றின் உணவுப் படையல், நீர்மப்படையல் ஆகியவை.

குருத்துவ ஆசிமொழிகள்[தொகு]


16 குரு அவற்றை ஆண்டவர்முன் கொண்டு வந்து அவனுக்காகப் பாவம் போக்கும் பலியையும் எரிபலியையும் நிறைவேற்றுவார்.
17 கூடையிலுள்ள புளிப்பற்ற அப்பத்தோடு ஆட்டுக்கிடாயை ஆண்டவருக்கு நல்லுறவுப் பலியாக ஒப்புக்கொடுப்பார்; மேலும், அவனுக்காக குரு உணவுப் படையலையும் நீர்மப் படையலையும் படைப்பார்;
18 நாசீர் புனிதப்படுத்தப்பட்ட தன் தலையைச் சந்திப்புக் கூடார நுழைவாயிலில் மழித்து, புனிதப்படுத்தப்பட்ட தன் தலைமுடியை எடுத்து நல்லுறவுப் பலியின் அடியில் இருக்கும் நெருப்பில் போடுவான்.
19 அவன் புனிதப்படுத்தப்பட்ட தன் தலையை மழித்த பின்னர் குரு வெந்துகொண்டிருக்கும் ஆட்டுக்கிடாயின் முன் சந்தை எடுத்து, கூடையிலிருந்து நெய்யப்பம் ஒன்றையும் புளிப்பற்ற அடை ஒன்றையும் எடுத்து நாசீர் கைகளில் வைப்பார்.
20 அவற்றை ஆரத்திப் படையலாகக் குரு ஆண்டவர் திருமுன் காட்டுவார். ஆரத்தியாகக் காட்டப்பட்ட மார்புப்பகுதியும் உயர்த்திப் படைக்கப்பட்ட தொடையும் புனிதப் பங்காகக் குருவைச் சேரும்; அதன் பின்னரே நாசீர் திராட்சை இரசம் குடிக்கலாம்.
21 நாசீர்ப் பொருத்தனை செய்பவனுக்கான சட்டம் இதுவே: ஆண்டவருக்கு அவன் கொண்டு வரும் நேர்ச்சைப்படையல், அவனது நாசீர்ப் பொருத்தனைக்கேற்ப இருக்க வேண்டும்; இது மற்றப்படி அவன் தர இயன்றதற்கு நீங்கலானது; அவனது பொருத்தனைக்கேற்பத் தன் நாசீர் அர்ப்பணத்துக்குரிய சட்டத்தின்படி அவன் செய்ய வேண்டும். [3]


22 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
23 நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்; நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை:
24 "ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!
25 ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக!
26 ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!"
27 இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்; நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.


குறிப்புகள்

[1] 6:2 எபிரேயத்தில் 'பிரித்தெடுக்கப்பட்டவர்' என்பது பொருள்.
[2] 6:3 = லூக் 1:15.
[3] 6:13-21 = திப 21:23-34.


(தொடர்ச்சி): எண்ணிக்கை: அதிகாரங்கள் 7 முதல் 8 வரை