படித்து இன்புறுவர். சுருங்கக் கூறின் மக்கள் மனங் கவரும் நூல்கள் எவை என்பதை அறிந்து அதற்கேற்ப நூல்களை வாங்கவும், எல்லாப் பொருள்களையும் பற்றிய நூல்களைப் பெறவும் முற்பட வேண்டும். இதனால் மக்கள் மனங்கவரும் நூல்களை மட்டுமே வாங்க வேண்டும் என்பதில்லை. எண்ணிக்கை குறைவாக இருப்பினும் எல்லாப் பொருள்களையும் பற்றிய நூல்கள் நூலகத்தில் உள்ளன என்ற மனநிறைவு மக்களுக்கு ஏற்படவேண்டும். விலையினை மட்டும் பொருளாக வைத்து நூல்களை மதிப்பிடுதல் கூடாது ; வாங்குவதும் கூடாது. எனினும் நல்ல நூல்களை உரிய விலை கொடுத்து வாங்குவதில் பின்னடைதல் கூடாது.
நூல்தேர்வு செய்யுங்கால், நூலகத் தலைவர் மேற்கூறியவைகளை தம் மனத்திற்கொண்டு மிக்க கவனத்துடன் தன்பணியைச் செய்தல் வேண்டும். நூலகத் தலைவர், மக்களுக்குச் செய்தி விளக்கம் அளிக்கும் நூலக அலுவலர் (Reference Librarian), நூலகப் பணியில் பழக்கம் மிக்கவர்கள் முதலியவர்களால் நூல் தேர்வு நடத்தப்படல் வேண்டும். இது தவிர அறிவாற்றல் நிரம்பிய சில பெருமக்களையும் ஆசிரியப் பெரியார்களையும் அநுபவ மிக்கவர்களையும் நூல் தேர்வு நடத்தும்பொழுது நூலகத் தலைவர் கலந்து கொள்ளலாம்.
பின்வருவன நூல் தேர்வுக்குரிய சிறந்த மூலங்களாகும் (Sources) :-
- க. பதிப்பகத்தார் அறிக்கை (Publisher's Circular) :- இஃது இங்கிலாந்தில் வெளியிடப்படும் வார இதழாகும்.