பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனின் திருக்கதை ◇45



"மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றுத முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ் மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னைக் கைத்தகலம் பற்றக் கனாக் கண்டேன் தோழிநான்" கோபியர் கன்னியர்கள் கண்ணனையே கனவிலும் நனவிலும் நினைத்து அவன் நினைவாக வாழ்ந்தனர். மணமான மங்கையரும் அவன் நினைவில் மயங்கி அவனோடு குரவைக் கூத்து ஆடக் குழுமினர். அவ்வப் பொழுது பால் நிலவில் அவன் ஊதும் குழல் ஓசை கேட்டு எங்கிருந்தாலும் கோபியர்கள் அங்கு வந்து அவனோடு ஆட வந்து கூடினர். அவர்களுள் இராதையே கண்ணனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டாள். கோபியர் ஒவ்வொருத்திக்கும் கண்ணன் தனித் தனியாக ஒரு ஒரு கண்ணனாகத் தோற்றம் அளித்து அவர்களோடு சேர்ந்து வட்டமாகக் கைகோத்துக் குரவைக் கூத்து ஆடினான். இதனை ரசக்கிரீடை என்று கூறினர். எல்லையற்ற மகிழ்ச்சியில் அவர்கள் ஆழ்ந்து தம்மை மறந்து பரவசப்பட்ட மீளா நிலையில் ஆனந்தத்தில் மிதந்தனர். இஃது எல்லை மீறும் நிலையில் அவர்களை மெல்ல ஆற்றும் பொருட்டுக் கண்ணன் விலகி விடுவது வழக்கம்; அப்பொழுது கோபியர்களே ஒருத்தி கண்ணனாகவும் மற்றொருத்தி கோபியராகவும் கைகோத்துக் கொண்டு குரவைக் கூத்து ஆடினர். காளிங்க மர்த்தனம், கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்தது, அசுரர்களை அவ்வப்பொழுது கொன்றது. இதைப் போன்ற நிகழ்ச்சிகளையும் தம் ஆடல் பாடல்களில் வைத்துச் சித்திரித்து ஆடினர். இந்தக் குரவைக் கூத்து நிகழ்ச்சிகள் கோபியர் உள்ளங்களில் மறக்க முடியாத நினைவுகளாய் நிலைத்து நின்றன. இந்நிகழ்ச்சிகள் இலையுதிர் காலமாகிய சரத் காலத்தில் நடைபெற்றன.