திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/தோபித்து (தொபியாசு ஆக‌ம‌ம்)/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

விக்கிமூலம் இலிருந்து


"நான் மனம் வெதும்பி அழுது புலம்பினேன்; தேம்பியவாறு மன்றாடத் தொடங்கினேன்: 'ஆண்டவரே, நீர் நீதியுள்ளவர். உம் செயல்களெல்லாம் நேரியவை; உம் வழிகள் அனைத்திலும் இரக்கமும் உண்மையும் விளங்குகின்றன...'" - தோபித்து 3:1-2.

தோபித்து (The Book of Tobit)[தொகு]

அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

அதிகாரம் 3[தொகு]

தோபித்தின் மன்றாட்டு[தொகு]


1 நான் மனம் வெதும்பி அழுது புலம்பினேன்;
தேம்பியவாறு மன்றாடத் தொடங்கினேன்:


2 "ஆண்டவரே, நீர் நீதியுள்ளவர்.
உம் செயல்களெல்லாம் நேரியவை;
உம் வழிகள் அனைத்திலும் இரக்கமும் உண்மையும் விளங்குகின்றன.
நீரே உலகின் நடுவர்.


3 இப்பொழுது, ஆண்டவரே, என்னை நினைவுகூரும்;
என்னைக் கனிவுடன் கண்ணோக்கும்.
என் பாவங்களுக்காகவும் குற்றங்களுக்காகவும்
என் மூதாதையருடைய பாவங்களுக்காகவும் என்னைத் தண்டியாதீர்.
என் மூதாதையர் உமக்கு எதிராகப் பாவம் செய்தார்கள்.


4 உம் கட்டளைகளை மீறினார்கள்.
எனவே நாங்கள் சூறையாடப்பட்டோம்,
நாடு கடத்தப்பட்டோம், சாவுக்கு ஆளானோம்.
வேற்று மக்களிடையே எங்களைச் சிதறடித்தீர்;
அவர்களுடைய பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும்
இகழ்ச்சிக்கும் எங்களை உள்ளாக்கினீர்.


5 என் பாவங்களுக்கு நீர் அளித்த தீர்ப்புகள் பலவும் உண்மைக்கு ஏற்றவை.
நாங்கள் உம் கட்டளைகளின்படி ஒழுகவில்லை;
உம் திருமுன் உண்மையைப் பின்பற்றி வாழவில்லை.


6 இப்பொழுது, உம் விருப்பப்படி என்னை நடத்தும்;
என் உயிர் பிரிந்துவிடக் கட்டளையிடும்.
இவ்வாறு நான் மண்ணிலிருந்து மறைந்து மீண்டும் மண்ணாவேனாக.
நான் வாழ்வதினும் சாவதே மேல்;
ஏனெனில் சற்றும் பொருந்தாத பழிச்சொற்களை நான் கேட்க நேர்ந்தது.
ஆகவே கடுந்துயரில் மூழ்கியுள்ளேன்.
ஆண்டவரே, இத்துயரத்தினின்று நான் விடுதலை பெற ஆணையிடும்;
முடிவற்ற இடத்திற்கு என்னைப் போகவிடும்;
உமது முகத்தை என்னிடமிருந்து திருப்பிக்கொள்ளாதேயும்;
ஆண்டவரே! வாழ்வில் மிகுந்த துன்பங்களைக் காண்பதினும்,
இத்தகைய இகழ்ச்சிகளைக் கேட்பதினும் நான் சாவதே மேல்.

சாரா[தொகு]


7 அதே நாளில் மேதியா நாட்டின் எக்பத்தானா நகரில் வாழ்ந்துவந்த
இரகுவேலின் மகள் சாரா,
தன் தந்தையின் பணிப்பெண்களுள் ஒருத்தி தன்னைப்
பழித்துரைத்ததைக் கேட்க நேரிட்டது.
8 ஏனெனில் ஒருவர் இறந்தபின் ஒருவராக
அவள் ஏழு ஆண்களை மணந்திருந்தாள்.
மனைவிகளுக்குரிய மரபுப்படி அவளுடைய கணவர்கள்
அவளுடன் கூடிவாழுமுன்
கொடிய அலகையான அசுமதேயு அவர்கள் எல்லாரையும் கொன்றுவிட்டது.
இதனால் அந்தப் பணிப்பெண் அவளிடம்,
"நீயே உன் கணவர்களைக் கொன்றவள்.
நீ கணவர்கள் எழுவரை மணந்திருந்தும்
அவர்களுள் எவருடைய பெயரும் உனக்கு வழங்கவில்லை.
9 உன் கணவர்கள் இறந்துவிட்டதற்காக எங்களை ஏன் தண்டிக்கிறாய்?
நீயும் அவர்களிடம் போ.
உன் மகனையோ மகளையோ நாங்கள் என்றுமே காணவேண்டாம்"
என்று பழித்துரைத்தாள்.


10 அன்று அவள் மனத் நொந்து அழுதாள்;
தன்னைத் தூக்கிலிட்டுக் கொள்ளும் நோக்குடன்
தன் தந்தையின் மாடியறைக்குச் சென்றாள்.
ஆனால் மீண்டும் சிந்தித்து,
"என் தந்தையை மக்கள் பழிக்கலாம்;
'உனக்கு ஒரே அன்பு மகள் இருந்தாள்;
அவளும் தன் துயர் பொறுக்க இயலாமல் நான்றுகொண்டாள்' என்று இகழலாம்.
இவ்வாறு என் தந்தை தமது முதுமையில்
துயருற்று இறக்க நான் காரணம் ஆவேன்.
எனவே நான் நான்று கொள்ளமாட்டேன்.
மாறாக நான் சாகுமாறு ஆண்டவரை இரந்து வேண்டுவேன்.
அவ்வாறாயின் என் வாழ்நாளில் பழிச்சொற்களை
இனிமேல் கேட்க வாய்ப்பு இராது" என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

சாராவின் மன்றாட்டு[தொகு]


11 அதே நேரத்தில் சாரா பலகணியை நோக்கிக்
கைகளை விரித்துப் பின்வருமாறு மன்றாடினாள்:
"இரக்கமுள்ள இறைவா போற்றி!
என்றும் உம் திருப்பெயர் போற்றி!
உம் செயல்களெல்லாம் உம்மை என்றும் போற்றுக!


12 இப்பொழுது எனது முகத்தை உம்மிடம் திருப்புகிறேன்;
என் கண்களை உம்மை நோக்கி எழுப்புகிறேன்.


13 இவ்வுலகிலிருந்து நான் மறைந்துவிடக் கட்டளையிடும்;
இதனால் இத்தகைய பழிச் சொற்களை நான் இனியும் கேளாதிருக்கச் செய்யும்.


14 ஆண்டவரே, நான் மாசற்றவள் என்பதும்
எந்த ஆணுடனும் உறவு கொண்டதில்லை என்பதும் உமக்குத் தெரியும்.


15 நான் நாடு கடத்தப்பட்டு வாழும் இவ்விடத்தில்
என் பெயரையோ என் தந்தையின் பெயரையோ இழிபுபடுத்தவில்லை.
நான் என் தந்தைக்கு ஒரே பிள்ளை;
அவருக்கு வாரிசாக வேறு குழந்தைகள் இல்லை;
அவருக்குச் சகோதரர் இல்லை;
நான் மணந்துகொள்ளத்தக்க நெருங்கிய உறவினர் யாரும் இல்லை;
என் கணவர்கள் எழுவரையும் ஏற்கெனவே இழந்துவிட்டேன்.
இனியும் நான் ஏன் வாழவேண்டும்?
ஆண்டவரே, நான் சாவது உமக்கு விருப்பமில்லையெனில்,
எனக்கு எதிராகச் சொல்லப்படும் பழிச்சொல்லையாவது
இப்போது அகற்றிவிடும்."


16 அந்நேரமே தோபித்து, சாரா ஆகிய இருவருடைய மன்றாட்டும்
கடவுளின் மாட்சியுடைய திருமுன் கேட்கப்பட்டது.
17 தோபித்து தம் கண்களினால் கடவுளின் ஒளியைக் காணும்பொருட்டு
அவருடைய கண்களிலிருந்து வெண்புள்ளிகளை நீக்கவும்,
தம் மகன் தோபியாவுக்கு இரகுவேலின் மகள் சாராவை மணமுடித்து,
அசுமதேயு என்னும் கொடிய அலகையை அவளிடமிருந்து விரட்டவும்,
இவ்வாறு அவர்கள் இருவருக்கும் நலம் அருள இரபேல் அனுப்பப்பட்டார்.
சாராவை அடைய மற்ற அனைவரையும்விட
தோபியாவுக்கே முன்னுரிமை இருந்தது.
தோபித்து முற்றத்திலிருந்து வீட்டிற்குள் வந்தார்.


அதே நேரத்தில் இரகுவேலின் மகள் சாராவும்
மாடியிலிருந்து இறங்கி வந்தாள்.


அதிகாரம் 4[தொகு]

தோபித்து பெற்ற கைம்மாறு
தோபித்தின் அறிவுரை
[தொகு]


1 மேதியா நாட்டின் இராகியில் வாழ்ந்த கபேலிடம்
தாம் கொடுத்து வைத்திருந்த பணத்தைத்
தோபித்து அன்று நினைவுகூர்ந்தார்.
2 "சாகவேண்டும் என்று நான் வேண்டியுள்ளேன்.
அதற்குமுன் என் மகன் தோபியாவை அழைத்து
இப்பணத்தைப் பற்றி விளக்கவேண்டுமே"
என்று தமக்குள் சொல்லிக்கொண்டார்.
3 எனவே அவர் தம் மகன் தோபியாவை அழைக்க,
அவரும் தந்தையிடம் வந்தார்.
மகனுக்குத் தந்தை பின்வருமாறு அறிவுரை வழங்கினார்:
"என்னை நல்லடக்கம் செய்; உன் தாயை மதித்துநட.
அவள் வாழ்நாள் முழுவதும் அவளைக் கைவிடாதே.
அவளுக்கு விருப்பமானதைச் செய்;
எவ்வகையிலும் அவளது மனத்தைப் புண்படுத்தாதே.
4 மகனே, நீ அவளது வயிற்றில் இருந்தபோது
உன் பொருட்டு அவள் தாங்கிய பல துன்பங்களை நினைத்துப்பார்;
அவள் இறந்ததும் அவளை என் அருகில் அதே கல்லறையில் அடக்கம் செய்.


5 "மகனே, உன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவரை நினை;
பாவம் செய்யவும், அவருடைய கட்டளைகளை மீறவும்
ஒருகாலும் விரும்பாதே.
உன் வாழ்நாள் முழுவதும் நீதியைக் கடைப்பிடி;
அநீதியின் வழிகளில் செல்லாதே.
6 ஏனெனில் உண்மையைக் கடைப்பிடிப்போர்
தங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பர்.
7 நீதியைக் கடைப்பிடிப்போர் அனைவருக்கும்
(7ஆ -19அ) 7ஆ உன் உடைமையிலிருந்து தருமம் செய்.
நீ தருமம் செய்யும்போது முகம் கோணாதே;
ஏழை எவரிடமிருந்தும் உன் முகத்தை திருப்பிக்கொள்ளாதே.
அதனால் கடவுளும் தம் முகத்தை
உன்னிடமிருந்து திருப்பிக்கொள்ளமாட்டார்.
8 உனக்குரிய செல்வத்துக்கு ஏற்பத் தருமம் செய்.
உன்னிடம் மிகுதியாகச் செல்வம் இருப்பின்,
மிகுதியாகக் கொடு;
சிறிது செல்வமே இருப்பின், சிறிது கொடு;
ஆனால் தருமம் செய்யத் தயங்காதே.
9 இவ்வாறு துன்பத்தின் நாள் வரும்போது
நீ உனக்கெனப் பெரும் செல்வம் சேர்த்திருப்பாய்.
10 நீ செய்யும் தருமம் உன்னைச் சாவிலிருந்து விடுவிக்கும்;
இருளுலகில் செல்லாதவாறு காப்பாற்றும்.
11 தருமம் செய்வோர் எல்லாருக்கும் அது
உன்னத இறைவன் திருமுன் சிறந்த காணிக்கையாகிறது.
12 மகனே, எல்லாவகைக் தீய நடத்தையிலிருந்தும்
உன்னையே காத்துக்கொள்;
எல்லாவற்றுக்கும் மேலாக உன் மூதாதையரின்
வழி மரபிலிருந்து ஒரு பெண்ணை மணந்து கொள்;
நாம் இறைவாக்கினர்களின் மக்களாய் இருப்பதால்
உன் தந்தையின் குலத்தைச் சேராத
வேற்றினப் பெண்ணை மணம் செய்யாதே.
மகனே, தொன்றுதொட்டே நம் மூதாதையராய் விளங்கும்
நோவா, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு
ஆகியோரை நினைவில் கொள்.
அவர்கள் எல்லாரும் தங்கள் உறவின் முறையாரிடமிருந்தே
பெண்கொண்டார்கள்;
கடவுளின் ஆசியால் மக்கட்பேறு பெற்றார்கள்;
அவர்களுடைய வழிமரபினர் இஸ்ரயேல் நாட்டை
உரிமையாக்கிக் கொள்வார்கள்.
13 அதனால், மகனே, உன் உறவின் முறையாரிடம் அன்பு காட்டு;
உன் இனத்தவரின் புதல்வர் புதல்வியரான
உறவினரிடமிருந்து பெண் கொள்ள மறுப்பதன்மூலம்
உன் உள்ளத்தில் செருக்குக்கொள்ளாதே;
இத்தகைய செருக்கு அழிவையும் பெருங் குழப்பத்தையும் உருவாக்கும்;
சோம்பல் சீர்கேட்டையும் கடும் வறுமையையும் உண்டாக்கும்;
சோம்பலே பஞ்சத்திற்குக் காரணம்.
14 வேலை செய்வோர் அனைவருக்கும்
கூலியை உடனே கொடுத்துவிடு;
இரவு முழுவதும் அதை உன்னோடு வைத்திராதே.
நீ கடவுளுக்கு ஊழியம் புரிந்தால் உனக்குக் கைம்மாறு கிடைக்கும்.
மகனே, நீ செய்வது அனைத்திலும் கவனமாய் இரு.
நீ பெற்ற பயிற்சிக்கு ஏற்றவாறு நல்லொழுக்கம் உடையவனாய் இரு.
15 உனக்குப் பிடிக்காத எதையும் பிறருக்குச் செய்யாதே.
அளவு மீறி மது அருந்தாதே;
குடிபோதைப் பழக்கத்துக்கு ஆளாகாதே.
16 உன் உணவில் ஒரு பகுதியைப் பசித்திருப்போருக்குக் கொடு;
உன் உடையில் ஒரு பங்கை ஆடையற்றிருப்போருக்கு வழங்கு.
தேவைக்குமேல் உன்னிடம் உள்ளதையெல்லாம் தருமம் செய்துவிடு.
தருமம் கொடுப்பதற்கு முகம் கோணாதே.
17 உன் உணவை நீதிமான்களின் கல்லறையில் வைத்துப் பரிமாறு;
பாவிகளுடன் அதைப் பங்கிட்டுக் கொள்ளாதே.
18 ஞானிகளிடம் அறிவுரை கேள்;
பயன் தரும் அறிவுரை எதையும் உதறித்தள்ளாதே.
19அ எல்லாக் காலத்திலும் உன் கடவுளாகிய ஆண்டவரைப் போற்று;
உன் வழிகள் நேரியவையாய் அமையவும்
உன் முயற்சிகளும் திட்டங்களும் வெற்றியடையவும் அவரிடம் மன்றாடு;
ஏனெனில் வேற்றினத்தார் எவருக்கும் அறிவுரை கிடையாது.
19ஆ ஆண்டவர் நல்ல அறிவுரை வழங்குகிறார்.
ஆண்டவர் விரும்பினால் மனிதரைப் பாதாளம்வரை தாழ்த்துகிறார்.
மகனே, இப்பொழுது இக்கட்டளைகளை நினைவில்கொள்;
அவை உன் உள்ளத்தினின்று நீங்காதிருக்கட்டும்.


20 "இப்பொழுது, மகனே, உன்னிடம் ஒன்று சொல்வேன்;
மேதியா நாட்டு இராகியில் உள்ள கபிரியின் மகன் கபேலிடம்
நானூறு கிலோ வெள்ளியைக் கொடுத்துவைத்துள்ளேன்.
21 மகனே, நாம் ஏழையாகிவிட்டோம் என அஞ்சாதே.
நீ கடவுளுக்கு அஞ்சிப் பாவத்தையெல்லாம் தவிர்த்து,
உன் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் நல்லது செய்தால்,
நீ பெரும் செல்வனாவாய்."


குறிப்புகள்

[1] (4:7ஆ - 19அ) - சீனாய் சுவடியில் விடப்பட்டுள்ளது.
இதனால் வத்திக்கான், அலக்சாந்திரியச் சுவடிகளிலிருந்து இப்பகுதி எடுக்கப்பட்டுள்ளது.
[2] 4:20 - பத்து தாலந்து.


(தொடர்ச்சி): தோபித்து: அதிகாரங்கள் 5 முதல் 6 வரை