பக்கம்:இன்ப வாழ்வு.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் அன்னைக்கு அழியா அணிகலன்பூட்டிய பெரும் புலவர்

முதுபெரும் புலவர் சுந்தர சண்முகனாரைக் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக எனக்குத் தெரியும். அவர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் (1948 - 49 ஆய் இருக்கலாம்) ஆசிரியர் பயிற்சி பெற்றபோது, அவ்வகுப்புக்கு உளவியல் கற்பிக்கும் ஆசிரியராய் இருந்தேன். அப்போது அவருடைய ஆழ்ந்த தமிழ்ப் புலமையை அறிந்தேன். பெரும்புலவர் சுந்தர சண்முகனார் ஒரு தமிழ்க்கடல். என் குருமார்களில் ஒருவரான அமரர் வாகீச கலாநிதி திரு. கி.வா. சகந்நாதன் அவர்களுக்குப் பின்னர், அவரை ஒத்த தமிழ்க் கடலாக விளங்கியவர் சண்முகனார். அவரைப் போன்று தமிழ் இலக்கிய இலக்கணங்களை முற்றும் கற்றுத் துறையோகிய தமிழ்ப் பேரறிஞர் எதினை பேர் இருப்பர்? என்று என் மனம் எண்ணிப் பார்க்கின்றது. . இல்லை என்றே என் உள்மனம் உணர்கின்றது. அவர் எண்ணற்ற நூல்களைப் படைத்துத் தன்னிகரற்றுத் தமிழ் மலையாய், தமிழ் இமயமாய் உயர்ந்து நிற்கின்றார். அவருடைய கெடிலக்கரை நாகரிகம், அகராதிக் கலை முதலிய ஆய்வு நூல்கள் தமிழ் வாழும் வரை நிலைத்து வாழும். திருவள்ளுவர் ஆய்வு நூல்கள், மிக நுண்மையான இதுவரை குறளாய்வாளர் எவரும் கண்டறியாத ஆழ்பொருள் பொதிந்தவை. தம்மை ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாபெரும் புலவர் பெருமகனார் சுந்தரசண்முகனார். அவர் படைத்துள்ள அனைத்து நூல்களும், கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய தமிழ் அன்னையின் விலைமதிப்பற்ற அரிய அணிகலன்கள். தமிழன்னை வாழும்வரை அவ்வணிகள் அவளது திருமேனியில் ஒளிவீசி நிற்கும் என்பதில் ஐயமில்லை.”

- பேராசிரியர் முனைவர் தி.முத்து கண்ணப்பனார் முன்னாள் மேலவை உறுப்பினர்

கல்லூரி முதல்வர் (ஓய்வு)

தலைவர், தமிழகப் புலவர் குழு

சென்னை-20

அக்டோபர், 1998.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/179&oldid=550754" இலிருந்து மீள்விக்கப்பட்டது