பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



2

எம்மொழியில் எழுதப் பெற்றுளவோ, அம்மொழி வழங்கும் மக்களின் நாகரிக வளர்ச்சிக்கும். அப்பொருள் பற்றிய ஆராய்ச்சிக்கண், அம்மக்கள் பெற்றிருக்கும் அறிவுத் திட்பத்திற்கும் ஏற்ப அமையும். அந்நூல்கள் எல்லாம், தாம் கூறப் புகுந்த பொருள் பற்றிக் கூறிச் செல்வனவே அல்லால், இலக்கியச் சிறப்புடையன ஆகா.

இலக்கியம், மக்களின் பண்பாட்டினை உணர்த்த எழுவது. நாகரிகம் வேறு. பண்பாடு வேறு. புற வாழ்க்கையின் வனப்பினை வகுத்துணர்த்துவது நாகரிகம் அகவாழ்க்கையின் வனப்பினை வகுத்துணர்த்துவது பண்பாடு. எழு நிலை மாட வாழ்வு எண்ணிய இடங்கட்கு எண்ணியபோதே விரைந்து செல்லவல்ல வகை வகையான ஊர்திகள் நல்ல ஆடை அணி, அறுசுவை உணவு ஆக இவை நாகரிகத்தின் நல்ல அறிகுறிகள். இவற்றைக் குறைவறப் பெற்றுள்ளமையினாலேயே ஒருவர் பண்பாடறிந்த பெரியார் எனப் போற்றப்படார். நாட்டு மக்களின் நலிவு கண்டு, கண்ணிர் விட்டுக் கலங்கி, அவர் துயர் துடைக்கத் துடிக்கும் தூய உள்ளம் உடையாரே பண்பாடறிந்த பெரியாராவர். பழி வாங்க எண்ணாப் பண்புடையார் பண்பாடறிந்தவ ராவர் : இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யும் சால்புடையார் பண்பாடறிந்தவராவர் அன்பும், அருளும், அறம்அறி உள்ளமும் உடையார் பண்பாடறிந்தவராவர். பழியஞ்சும் பக்குவம் உடையார் பண்பாடறிந்தவராவர். இத்தகு பெருவாழ்விற்குச் செல்வ வாழ்வு வேண்டுவதில்லை, செல்வம் பெறாதாரும் சீரிய