உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36. சிவபிரான் பூண்பன, அணிவன

33

வளரும். மூங்கில்கள் முத்தங்களைச் சொரியும். குருந்தம், கோடல், இலவங்கம், ஏலம் மணம் வீசும். ஆனை, கரடி, குரங்கு, கூகை, சிங்கம், பன்றி, மயில் உலவும். பாம்புகள் இரவில் சஞ்சரிக்கும். கூகைக்குலம் ஓடித் திரியும். ஆனையும், ஏனமும் (பன்றியும்) திரள் திரளாக அணைந்து செல்லும்; இரவில் வழி திகைத்த ஆண் யானை சாரல்வழி ஓடிப் பெண் யானையுடனும் கன்றுடனும் அடிவாரஞ் சேரும். வழி தவறின பெண் யானையைக் காணாது தேடி ஓடிய ஆண் யானை அதைக்கண்டு அழைத்துச் சென்று அதனுடன் சாரலில் உறங்கும்.

ஆண் குரங்கோடு பெண் குரங்கு திரியும். மயில் பெடையுடன் ஆடும், ஆலும்; பசுக்கூட்டங்கள் மேயும். கனைத்த எருமை காணாதுபோக ஆயன் புல்லாங் குழல் ஊதுவான். அந்த நாதத்தைக் கேட்டு எருமைகள் யாவும் ஒன்றுசேரும். குறமகளிர் ஆடியும் பாடியும் முத்தங்களை விலைக்கு அளந்து கொடுப்பார்.

சாரலில், பொன்னும் மணியும் கொழித்து அருவிகள் இழியும். சாரல் அருவிகளில் யானைகளும் இடறும். மழைக்கு அஞ்சின பசுவானது பசுக் கூட்டங்களுடன் வந்துசேரும்.

36. சிவபிரான் பூண்பன, அணிவன

1. ஆமை [189]:- இது சிவபிரான் கண்டத்தில் அணியப்பட்டு அவர் திருமார்பில் விளங்கும். அவர் ஆமையைப் பூணெனக் கொண்டுள்ளார். ஆமையை அணிந்து நடனம் செய்வர். அவர் அணிந்துள்ள ஆமை அழகாமை, இள ஆமை, எழிலாமை, ஏர்கொள் ஆமை, குறளாமை, பேரெழிலாமை, பொன்திகழ் ஆமை, முற்றலாமை, வரியாமை, வற்றலாமை, வாள் வரி யாமை என வர்ணிக்கப்பட்டுளது.

2. ஏன மருப்பு [191]:- ஏனத்தின் வெண்கொம்பு, ஏனத்தின் எயிறு, ஏனத்தின் முள் இவை தமைத் தமது மார்பில் இறைவர் பூணாக அணிந்துள்ளார்.