பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5. ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இவ் வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து அருந்தமிழ்த் தொண்டாற்றிய தமிழ்ச் சான்றோர் சிலருள் குறிப்பிடத் தக்கவர் மு. இராகவை யங்கார் அவர்கள். தமிழ் மொழிப் புலமையும் வடமொழிப் புலமையும், ஆங்கில அறிவும். மிக்கவர். சேதுபதிகளின் ஆதரவாலும், மதுரைத் தமிழ்ச் சங்கத் தொடர்பாலும், தம் விடா முயற்சியாலும் இவர் கற்றுத் துறைபோய தமிழ்த் துறைகள் பல. இவர் ஒரு சிறந்த ஆராய்ச்சியாளர். பதிப்பாசிரியர்; இதழாசிரியர்; சொற்பொழிவாளர்; கவிஞர். இத்தகு சீர்மையாளர் தம் வாழ்க்கை வரலாற்றையும், தமிழ்த் தாய்க்கு அவர் ஆற்றிய தொண்டுகளையும் குறித்து இவண் காண்போம்.

வாழ்க்கை வரலாறு

பிறப்பும் வளர்ப்பும்

1878ஆம் ஆண்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம் சமஸ்தான வித்துவானாக விளங்கிய சதாவ தானம் முத்துசுவாமி ஐயங்கார் அவர்களுக்கு ஒரு மகனாகப் பிறந்தவர். வைணவ குலத்தைச் சார்ந்தவர். இளவயதிலேயே முத்துசுவாமி ஐயங்கார் இறந்து விட்டதால், அவர்தம் மாணவர் பாண்டித்துரைத் தேவர் அவர்கள் இவரை வளர்த்து வந்தார்.