உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகுதி]

தமிழ்மொழியின் வரலாறு

215

ரத்திற் சொல்லின் பாகுபாடுகளும், அவற்றினியல்புகளும் முதலாயின விரித் துரைக்கப்பட்டுள. மற்றுப் பொருளதிகாரத்திலோ களவியலுங் கற்பியலுமாகிய அகப்பொருளும் அவற்றின் துறைகளும், புறப்பொருளும் அவற்றின் துறைகளும், மெய்ப்பாட்டியல் உவமவியல் செய்யுளியல் மரபியல்களும் கூறப் பட்டிருக்கின்றன.

இனி ஐவகை பயிலக்கணங்களாவன ‘எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி’ யென்பன. இவ்வைந்தனுள்ளே ‘தொல்காப்பிய’த்தில் முதல் மூன்றை மட்டிலே விரித்துக் கூறுவார், செய்யுளிய லென்றதன்கண்ணே யாப்பை விரித் தோதியும், உவப்பலென்றதன் கண்ணே அணியை யெடுத்தோதியும் ஒராற்றான் ஐவகை யிலக்கணமுங் கூறினாராயினார். அன்றியும் தொல்காப்பியனார் காலத்தே ஐவகை யிலக்கணமென்ற பாகுபாடின்றி யிருந்திருத்தலு மியல்பே; அல்லது யாப்பணிகள் பொருளதிகாரத்தின் பகுதிகளெனவே கருதப்பட்டிருந்தன வென்றலும் அமையும்.

கடைச் சங்கத்தார் காலத்தி லேற்பட்ட ‘இறையனாரகப் பொருளுரை’ யிற் “பெய்தபின் அரசன் இனி நாடு நாடாயிற் றாகலின் நூல்வல்லாரைக் கொணர்கவென்று எல்லாப் பக்கமும் போக்க, எழுத்ததிகாரமுஞ் சொல்லதிகாரமும் யாப்பதிகாரமும் வல்லாரைத் தலைப்பட்டுக் கொணர்ந்து, பொருளதிகாரம் வல்லாரை எங்குந் தலைப்பட்டிலே மெனவந்தார். வர, அரசனுடம்புடை படக் கவன்று, ‘என்னை? எழுத்துஞ் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றோ பொருளதிகாரம் பெறேமேயெனின், இவை பெற்றும் பெற்றிலேம்’ எனச் சொல்லாநிற்ப” என்ற கூற்றினை உய்த்து நோக்கி யுணரும்போது, அக்காலத்தில் ‘எழுத்து, சொல், பொருள், யாப்பு’ என நால்வகையே வழங்கின வென்பது துணியப்படும். அஃதாவது தொல்காப்பியனார் காலத்திற் பொருளதிகாரத்தினுள்ளடங்கிய யாப்பு, கடைச் சங்கத்தார் காலத்தில் அதினின்றும் பிரிந்து தனித்து ஓரதிகாரமாயிற்று என்பதாம்.

அதன்பின் யாப்பதிகாரம் மிக்க சிறப்படைந்து பல்லோராலும் பாராட்டப்பட்டது. அக்காலத்திருந்த புலவர் பலரும் யாப்பு நூல்கள் பல இயற்றினர். காக்கைபாடினியர், அவிநயனார், மயேச்சுரனார் முதலாயினார் தத்தம் பெயரால் யாப்பிலக்கணங்கள் வகுத்தனர். பின்னர் ‘யாப்பருங்கலம்’, ‘யாப்பருங்கலக் காரிகை’ என்ற நூல்கள் வகுக்கப்பட்டு வழங்குவன வாயின.

இடையில் பொருளதிகாரப் பயிற்சி குன்றியபோது ‘இறையனா ரகப் பொருள்’ என்ற சிறிய இலக்கண நூலும், மணிவாசகப் பெருமான் வாய்மலர்க் தருளிய ‘திருக்கோவையார்’ என்ற இலக்கிய நூலும் ஏற்பட்டன. அதன் மேற் சில புதிய கருத்துக்களை யுடன்கூட்டி நாற்கவிராஜ நம்பி யென்பவர் ‘அகப்பொருள் விளக்கம்’ என்ற இலக்கண நூலியற்றினர். பின்னர்க் ‘கல்லாடம்’, நம்மாழ்வார் செய்தருளிய ‘திருவிருத்தம்’ என்ற அகப்பொருளிலக்கிய