பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய

[முதற்

நூல்கள் வெளிப்போந்தன. ஐயனாரிதனார் என்பவர் ‘புறப்பொருள் வெண்பா மாலை’ என்ற நூல் வகுத்தனர்.

இவ்வாறு நால்வகை யிலக்கணமே சிலகாலம் வழங்கி வந்தன. அதன் மேல் வடநூல்வாணரோடு ஊடாடி, ஐந்தாவது வகை யிலக்கணமாகிய அணியதிகாரத்தையுந் தமிழ்ப் புலவர்கள் விருத்தி செய்து கொள்ளப் புகுந்தனர். ‘அணிநூல்’, ‘தண்டியலங்காரம்’ முதலிய நூல்கள் இயற்றப்பட்டன, இவற் றுட் பின்னதே தமிழ் மக்களுட் பயிற்சிமிக்குடையதாய் விளங்குகின்றது. இந்நூலாசிரியர் பொதுவணியியல், பொருளணியியல் சொல்லணியியல் என்ற மூன்று பிரிவினில் தம்நூலை முடித்திருக்கின்றனர். பொதுவணியியலிற் பொதுவாகப் பலவகை நலப்பாடுகளும் புனைவு முறைகளும் கூறப்பட்டுள. பொருளணியியல் தன்மையணி முதலாக முப்பத்தைந் தணிகள் கூறப்பட்டுள. இப்பொருளணிகளிற் பல உவமமென்ற ஓரணியினடியாகவே தோன்றின வென்பது பல்லோர் துணிபு. ஆசிரியர் தொல்காப்பியனாரும் இத்துணியினர் போலும். இது வடமொழி அப்பைய தீக்ஷிதரவர்களுக்கும் உடன்பாடாதல்,

“உவமை யென்னுந் தவலருங் கூத்தி
பல்வகைக் கோலம் பாங்குறப் புனைந்து
காப்பிய வரங்கிற் கவினுறத் தோன்றி
யாப்பறி புலவ ரிதய
நீப்பது மகிழ்ச்சி பூப்ப நடிக்குமே”

என்ற அவரது ‘சித்திரமீமாஞ்சைக்’ கூற்றினான் விளங்கும், இனிச் சொல் லணியியலில் மடக்கும் சித்திரமுமாகிய மிறைக்கவிகளின் பாகுபாடுகளும், அவற்றினிலக்கணங்களும் பரக்கக் கூறப்பட்டுள.

மற்று, ஐந்திலக்கணங்களையும் முற்றத் தனித்தனி கூறும் நூல்கள் மிகச் சிலவே. அவை தாம் ‘வீரசோழியம்’, ‘இலக்கண விளக்கம்’, ‘தொன்னூல் விளக்கம்’ என்பனவாம். வீரசோழியும் பெரும்பாலும் வடநூன் முறையையே தழுவிச் செல்வது. இலக்கண விளக்கமுடையார் யாப்பணிகளைப் பின்னூல்கள்போல விரித்துக் கூறினும் அவற்றைப் பொருளதிகாரத்தின் கண்ணேயே யடக்கிக் கூறினர். தொன்னூல் விளக்கமுடையோர் பொருளதி காரத்தைச் சுருகிக் கூறினும் யாப்பணிகளை விளங்கக் கூறினர். தண்டி யலங் காரம்போலத் தனியே அணியிலக்கணங் கூறுவதாய், ஆனால் அதனினும் விரிந்ததாய், ‘மாறனலங்காரம்’ என்றதோர் நூல் ஏற்படுவதாயிற்று. இது மிகச் சிறந்ததோர் நூல். அதன் மேற் ‘குவலயாநந்தம்’ என்ற வடமொழி யலங்காரசாஸ்திரம் தமிழின்கண் மொழிபெயர்க்கப் படுவதாயிற்று. இது புதுமை வழியிலியன்றதோ ரினிய நூல். இதன்கண்ணே உவமையணி முதல் ஏதுவணியீறாக நூறணிகள் கூறப்பட்டுள.

இவ்வாறு தமிழ்மொழி ஐவகை யிலக்கணமு முடையதாய நிலைமை யெய்தி விளங்கா நின்றது. பவணந்தி முனிவர்செய்த ‘நன்னூல்’ எழுத்துஞ்