பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

115

உள்ளூரச் சங்கடமடைந்திருக்கிறார் என்பதை அவள் அறிவாள். அந்தக் காறி உமியும் கொப்பளிப்பு வெறுப்பைப் பிரதிபலிப்பதாகத் தோன்றுகிறது.

“அப்பா, நீங்க தப்பா நெனச்சிடக் கூடாது. பேபிக்கு டாக்டர் பிரைம்ரி காம்ப்ளக்ஸ்னு சொல்லி மருந்து குடுத்திட்டு வாரோம். இங்க ஹைஜினிக்கா இல்ல. சளியும் காய்ச்சலும் வரக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு. சின்னப் புள்ள, எல்லாரையும் போல, கேணித் தண்ணிய மொண்டு குடிக்கும். அத்தோட சுகந்தாவுக்கு 'மென்ஸஸ் டைம்’ வசதி இல்லாத இடத்தில இருந்து பழக்கமில்ல. அப்பா இங்க ஒரு பாம்பே டைப் கக்கூஸ் கட்டிடுங்க. அதனாலேயே இங்க வரச் சங்கடப்பட வேண்டி இருக்கு...” என்று அப்பாவிடம் எதற்கோ குழை அடிக்கிறான்.

“கட்டவேணான்னு நான் சொல்றனா? வந்து லீவு ரெண்டு மாசமும் இரு. எப்படிவூட்டக் கட்டணுமோ அப்படிச் செலவு பண்ணிக் கட்டு!”

செவந்தி பாத்திரங்களை உள்ளே கொண்டு வந்த கையோடு அவர்கள் பேசுவதை உன்னிப்பாகக் கேட்க அந்த வாயிலிலேயே நிற்கிறாள்.

“செவந்தி ஏன் நிக்கிறே? நாங்க காபி ஒண்ணும் குடிக்கல. காபி கொண்டா...”

“காபிக்கு வைக்கிற...” என்று சொல்லிவிட்டு அவர்கள் பேசுவதைக் கேட்பதிலேயே அவள் தீவிரமாக இருக்கிறாள்.

“எனக்கு ரெண்டு மாசம் இங்க எப்படி இருக்க முடியும் அப்பா? தவிர இங்க டச் வுட்டுப் போயி ரொம்ப நாளாச்சி. மாப்பிள்ளதா இருக்காரு. வூட்ட இடிச்சிச் சவுரியமா கட்டிக்க வேண்டியதுதான்?”

“ஒரு லட்சம் பணத்தை அனுப்பி வையி. மாடி போட்டு, குழா கக்குசெல்லாம் போட்டு நல்லா கட்டிடறோம். இந்த வெள்ளாமய நம்பி, வூடு கட்ட முடியாதப்பா இப்பதா செவந்தி ஏதோ போட்டு வெள்ளாம எடுத்தது ரொம்ப சிரமம். எனக்கும் வயிசாயிப் போச்சு. முடில. ஒழவு கூலி எழுபது