பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102


புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி
வையை என்ற பொய்யாக் குலக்கொடி
..........................
புண்ணிய நறுமலர் ஆடை போர்த்து "[1]


என்று பாடுகிறார் இளங்கோ,

உமறுவும், சீறாப்புராணத்தில் வாலிகளைப் பாவையருக்கு உருவகப்படுத்திப் பாடுவர். வாவியில் மலர்ந்திருக்கும் தாமரையே மங்கையின் முகமாகும்; குவளை மலர்களே விழிகளாகும்; மலர்களின் மலராத மெல்லரும்புகளே மார்பாகும்; வாவியைப் போர்த்திருக்கிற பசிய இலைகளே, உடுத்திருக்கும் அழகிய ஆடையாகும்.

"நலங்கொள் தாமரை முகமலர் தரநறுங் குவளை
விலங்கி வள்ளையில் விழியெனக் கிடப்ப, மெல்லரும்பு
துலங்கு மென்முலை தோன்றிடப் பச்சிலை துகில்போர்த்
திலங்கு வாவிகள் அணியிழை மகளிர்ஒத்திருந்த,"[2]


எனும் சீறாவின் உருவகப் பாடல் எழ, உயிர்க் காரணமாய் இருப்பவர் இளங்கோவே எனலாம்.

நிலவில் மயங்கும் உமறு

முழுநிலவின் ஒளி வெள்ளத்தில்-எழில் வடிவில் மயங்காத கவிஞரும் இல்லை; நிலவுக்கு இடம் கொடாத கவிதைகளும் இல்லை. உமறுவோ இயற்கையே இறைவன் என்னும் கருத்துடையவர். சூரியனாயும், நிலவாயும், நட்சத்திரங்களாயும், மலையாயும், கடலாயும் கடவுளே விளங்குகிறான் என்பதைக் கடவுள் வாழ்த்துப் பகுதிலேயே உமறு வலியுறுத்தியிருக்கிறார்.


  1. 1. சிலம்பு புறஞ்சேரியிருந்த காதை 116-172
  2. 2. சீறா நாட்டுப் படலம். 44