உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

25

“ஐயோ, அவ நிஜமா ஸ்கூலுக்கே வரதில்லே. வந்தாலும் மூணுமணிக்கே போயிடறா. சினிமாக் கொட்டாயில் மத்தியானம் ஒத்தன்கூட இருந்தாளாம்.”

அக்கா பொறுக்காமல், “சீ! வாயை மூடு! யாரைப் பார்த்துப் பேசறே நீ?” என்று கத்தினாளாம்.

“மாமி, நீங்க விசாரிச்சுப் பாருங்கோ, அவன் எப்பவும் நயினார்சந்து டீக்கடையில் உக்காந்திருப்பான். சுருட்டை சுருட்டையா கிராப்பு வாரிண்டு, சில்க் சட்டை, மைனர் செயின் போட்டுண்டு அங்கேயே நின்று அவ வரப்பல்லாம் சிரிச்சு நானே பார்த்திருக்கிறேன். ஆலமரத்துக்கிளின்னு வந்த சினிமாவில் அப்படியே ஒரு பாட்டு வரதே, அதை அவன் தான் எழுதினானாம். கவிஞன் தனராஜ். இங்கே வந்து ஏதோ படத்துக்குப் பாட்டெழுத டீக்கடைக்குப் பின்னால ரூம் வச்சிண்டிருக்கானாம்...”

இதெல்லாம் அவளுக்கு அன்று வரும்போதே தெரிந்து விட்டது. கடைவீதியில் மதுரம் மாமி பார்த்துவிட்டுச் சொன்னாள். “ஏண்டி பெண்ணே, அசட்டுத்தனமாக நடந்துக்கறே, உங்கக்கா கொன்னுடப் போறாளே?” என்று மனமிரங்கினாள்.

அவளுக்கு அப்போது ஒன்றுமே புரியவில்லை. அவள் பெரிய வாயிலைக் கடந்து தோப்புக்குள் நடந்து வரும்போதே அக்கா கிணற்றடியில் அவளைக் கண்டு விட்டாள்.

“ஏண்டி, மானங்கெட்டவளே! எங்கேடி போயிட்டு வரே?” என்று கையிலிருந்த விறகுக் குச்சியினால் அடிக்க வந்தாள்.

மைத்ரேயி ஓடிச் சென்று மாமரத்தின் கீழ் நின்றாள்.

“என்னை எதுக்கு அடிக்கவறே? நான் ஒண்ணும் இந்த விட்டில் இருக்கப் போறதில்லே” என்றாள் அசையாமல்.

“ஐயையோ! குடிமுழுகிப் போயிடுத்தே? இங்கே சித்த வந்து இந்தச் சிறுக்கி சொல்றதைக் கேளுங்கோ...!” என்று கூக்குரலிட்டாள் அக்கா. பிறகு கணவனும் மனைவியுமாக அவளுக்கு வசை மாரி பொழிந்தார்கள்; காரித் துப்பினார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/27&oldid=1123716" இலிருந்து மீள்விக்கப்பட்டது