பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

45


மாவை வழித்துக் கரைத்துக் கொண்டு வந்து உள்ளே வைக்கிறாள். பட்டென்று மின் விளக்கு அணைந்து போகிறது.

“என்ன எளவு, ரெண்டு தூத்தல் போட்டால் வெளக்கு அணையிது! சீமண்ண விளக்கைக் கொளுத்தி வையி... செவந்தி..”

ரங்கன் குறட்டில் உட்கார்ந்து ஏதோ வரவு செலவுக் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

செவந்தி இருட்டில் முதலில் சாமி விளக்கை ஏற்றி வைக்கிறாள். பிறகு முட்டைச் சிம்னியைத் தேடுகிறாள். அதில் எண்ணெய் கொஞ்சமாக இருக்கிறது. எண்ணெயே போன மாசம் போடவில்லை. இருக்கிற எண்ணெயை, டிஃபன் போடும் வேணி தனக்கு வேண்டும் என்று வாங்கிக் கொண்டு போனாள். கொடுக்க மாட்டேன் என்று சொல்ல முடியவில்லை. எல்லோருக்கும் எல்லாரும் வேண்டித்தானே இருக்கிறது?

“செவந்தி...! ஒரு நூறு ரூபா இருந்தா குடேன்”

செவந்தி மஞ்சள் ஒளியில் அவன் முகத்தை உற்றுப் பார்க்கிறாள்.

“என்ன வெள்ளாடுறீங்களா? இந்தச்சாமிக்கும் காருக்கும் நானா செலவழிக்கச் சொன்னேன்?”

“அட ஒடனே கத்தாதே. நா நாளக்கி சாயங்காலம் குடுத்திடறேன்.”

“எங்கிட்ட நூறு காசு கூட இல்ல. களயெடுக்கணும். அடுத்த வாட்டி உரம் போடணும். ஊரியாவும் பொட்டாஷும் வாங்கிட்டு வரணும். வண்டிக் கூலி கேப்பா. நானே முழிச்சிகிட்டிருக்கிறேன். வீட்ல மல்லி முளவா சாமானில்ல. மாடு வேற செனயாநிக்கிது. ஒண்ணும் கட்டி வரலப்பா!”

“உங்கிட்டக் கேட்டா இப்படித்தா. ஈசக் கூட்டம் அப்புநாப்ல பொல பொலத்து மனுசன உண்டு இல்லைன்னு பண்ணிடுவ.”

“செவுந்தி, சுந்தரி, அதுகிட்டக் கேட்டு வாங்கின. மனசுக்கு எப்பிடியோ இருக்கு...”