18
கோடுகளும் கோலங்களும்
“ஆமா, வா சுந்தரி, அடுப்புல அரிசி கொதிக்குது. குழம்பக் கூட்டி வச்சிருக்கே. பழஞ்சோறு இருக்கு. சரோ, சரவணன் சாப்பிட்டுட்டு ஸ்கூலுக்குப் போகட்டும். சைக்கிள்ள ரெண்டு பேரும் வந்து பகலுக்கு சாப்புடுவாங்க... நா வாரேன்...”
நோட்டுப் புத்தகம் அலுமினியம் கூடையில் இடம் பெறுகிறது.
நடவு வயலுக்கு கால் காணிக்கு... என்று மனசுக்குள் பாடம் படித்தவளாய், ஜிப்சம், யூரியா, பொட்டாஷ் என்று வைக்கிறாள். நாற்று நனைக்க அசோஸ்பைரில்லம். உயிர் உரம் கொடுத்தாயிற்று. பிறகு...
அம்மாவுக்கும் மகள் சரோவுக்கும் இவள் கேலிக்குரியவளாகிறாள்.
முகம் கை கால் கழுவிக் கொண்டு உள்ளே வருகிறாள். பழைய சோற்றை உப்பைப் போட்டுக் கரைக்கிறாள். ஒரு வெங்காயத்துண்டைக் கடித்துக் கொண்டு குடிக்கிறாள். சுந்தரி அடுப்பைப் பார்த்து எல்லாம் செய்வாள். இந்த நிலம், வீட்டுக் கொல்லையில், கூப்பிடு தூரத்தில்தான் இருக்கிறது. தலையிலும், இடுப்பிலும் சுமை-டயர் வளையம் கையில்... நடக்கிறாள் செவந்தி. வெயில் சுள்ளென்று விழுகிறது.
ஓரத்தில் ஊர்ப் பொதுவிடம். நடு ரூமில் பஞ்சாயத்து நூலகம். சுற்றி உள்ள இடத்தில் குந்தியிருப்பார்கள் ஆண்கள். தண்ணிர் முறைக்காரர்களும் இருப்பார்கள். ஆற்றிலே பாதி நாள் தண்ணிர் இருக்காது. மழை பெய்தால் மட்டுமே கால்வாயில் தண்ணிர் வரும். பக்கத்தில் வெற்றிலைக் கொடிக்காலின் கார மணம் வருகிறது. மடையில் நீர் பாய்ந்திருக்கிறது. இது கிணற்று நீர். அந்தப் பூமியும் இவர்களுடையது. இப்போது, சிங்கப்பூர்க்காரர் குடும்பத்துக்குப் போய் இருக்கிறது. அவர்கள் வெற்றிலைக் கொடிக்கால் வைத்திருக்கிறார்கள்.
பழனிச்சாமி வெற்றிலை கிள்ளுகிறான்.
“நடவா...” என்று கேட்கிறான்.
"ஆமாம் பொல்லாத நடவு... கால் காணி... முழுசையும் போட ஆசைதான். நாற்று முழுசுக்குமாக விட்டிருக்கிறார்கள்."