பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

17

உழைக்கும் ஒரே ஆள் அப்பன்தான். அம்மாவும் வீட்டுப் படி இறங்க மாட்டாள். கழனி வேலை என்று செல்பவள் அவள் மட்டுமே.

ஆனால் பெண்சாதியின் 'மேட்டிமைத்தனம்' ரங்கனால் பொறுக்க முடியுமா?

“என்னமோ ரெண்டு பொம்பளைங்க ஜீப்புல வந்து எறங்கி பயிரு வைக்கற பாடம் நடத்துனாங்களாம். இவங்களுக்குத் தலகால் புரியல! நாலு புஸ்தகத்த, அதுவும் இங்கிலீஷ் புஸ்தகத்தப் படிச்சிட்டுப் பயிர் வைக்கிறதாம். உர மருந்து பூச்சி மருந்து அது இதுன்னு கெடங்கில் வெலயில்லாம கிடந்திச்சின்னா, தலையில கட்ட இப்பிடி ஒரு சூட்சுமம் போல. இவளுவ புத்தகத்தில எழுதிட்டு வந்து, அது போல பயிரு வைக்கிறதாம். தொரசானி முருங்கக்கா சாப்புட்ட கத தா. அப்படியே முழுங்கணுமின்னு தொண்டக் குழில சக்கய எறக்கிட்டுத் தவிச்சாளாம்".

“அவவ, ஏரிப் பக்கத்துப் பூமியெல்லாம் பயிரு வச்சிக் கட்டுப்படி ஆவலன்னு பிளாட்டு போட வித்துட்டு டவுன் பக்கம் போயி எதானும் தொழில் பண்ணலான்னு போறா”.

“பாரு. நாகு பெரியம்மா மகனுக போடு போடுன்னா போடுறானுக. ஒருத்தன் பைனான்ஸ் கம்பனி வச்சிருக்கான். ஒருத்தன் ரியல் எஸ்டேட் பிஸினஸாம். காரிலதா வாரான். மோதிரம் என்ன, தங்கப்பட்டை வாட்ச் என்ன, அடயாளமே தெரியல... ஆளுங்கட்சிலகூட பலான ஆளெல்லாம் தெரியும். அத்தினி செல்வாக்கு. இவ என்னமோ, ஏக்கருக்கு முப்பது மூட்டை எடுக்கப் போறாளாம்... அத்தே, காபியக் கொண்டாந்து குடுங்க. எனக்கு வேலை இருக்கு; போற...”

செவந்திக்கு உள்ளூர ஆத்திரம் பொங்குகிறது.

“நான் இத்தச் சவாலா எடுத்துக்கறேன்... பண்ணிக் காட்டுறேன். அதுவரைக்கும் பேசாதீங்க!”

இதற்குள் சுந்தரி வாசல் வழியே வருகிறாள். “ஏக்கா? நடவாமே? அம்சு சொல்லிச்சு...”