32
கோடுகளும் கோலங்களும்
கொல்லென்று அமைதி படிகிறது.
அப்பாவின் இழுப்பு ஒலி மட்டுமே துருப்பிடித்த கதவுக்கீல் மாதிரி, இருட்டில் ஒலிக்கும் சில்வண்டு போல் வலிமையாகக் கேட்கிறது.
“சாமி, அதுக்கு என்ன பரிகாரம் செய்யலாம்னு சொல்லுங்க. எதுன்னாலும் செய்யலாம்” என்று அம்மா முன்வந்து கும்பிடுகிறாள்.
அப்பனுக்குப் பொறுக்கவில்லை.
“சாமி, என் மச்சினிச்சிதா. இவப்ப, என் மாமனுக்குப் புள்ளக் கெடயாது. ரெண்டு பொம்புளப் புள்ள. அதும் சின்னதிலியே பெத்தவ போயி, ரெண்டையும் மறுகலியாணம் கட்டாம வளர்த்தாரு. அவ தோசம், கடன் ஆறுமாசத்துல புருசன் போயிட்டா. பெறகு அவ இங்கிருக்கக் கூடாதுன்னு ஒரு கலமசம் வந்துட்டது. உடம் பெறந்தவளே விசமாயி வெரட்டிட்டா. இருவது வருசமாயிடிச்சி. இப்ப கொஞ்ச காலமா எதும் சரியில்ல. பெரிய பைய... அவனுக்கு முத மூணு புள்ள தங்கல. அவனும் எங்கள வுட்டுப்போயிட்டா. நிலம் நீரு சுகமில்ல. ஒண்னும் விருத்திக்கு வர இல்ல. போன வருசம் திடீர்னு ஒழவு மாடு சீக்கு வந்து செத்துப் போச்சி... இவளுக்கும் எப்பவும் சீக்குதா...”
சாமி அவரையே உற்றுப் பார்க்கிறார். பிறகு தாடியை உருவுகிறார்.
“உங்க மனசில் குற்றம் இருக்குதோ இல்லையோ, குற்றம் பண்ண உணர்வு இருக்குது. அதுதான் உங்களை சிரமப்படுத்துது..” என்று சொல்லி விட்டு எல்லோரையும் பார்க்கிறார்.
“அந்தப் பொம்புள ஏதேனும் வச்சிருக்கிறாளா, சாமி?” என்று அம்மா கேட்கிறாள்.“ம்..ம்..” என்று தாடியை உருவிக் கொள்ளும் சாமி தலை நிமிராமல் யோசிக்கிறார்.
“அத்த எடுக்க முடியாதா சாமி ராத்திரி முழுக்க இப்படி சாயங்காலமானா ரொம்ப சாஸ்தியாவுது. ஆசுபத்திரி டாக்டர்ட்ட மாத்திரை வாங்கிக் குடுக்கிறோம். சம்சாரி வூடு.