பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

பதிற்றுப்பத்து தெளிவுரை


ஈத்துக்கை தண்டாக் கைகடுந் துப்பின்
புரைவயிற் புரைவயிற் பெரிய நல்கி
ஏமம் ஆகிய சீர்கெழு விழவின்
நெடியோன் அன்ன நல்லிசை
ஒடியா மைந்த! நின் பண்புபல நயந்தே! 40

தெளிவுரை : சேரலாதனே! மேகங்கள் தவழ்ந்து வந்து தங்கும் உயரமான மதிற்கவர்களையும், அவற்றை அடுத்ததாக விளங்கும் காவற்காடுகளையும் அழித்தவராய், வரிசை வரிசையாகச் செல்லும் போர்க்களிறுகளோடு, பகைத்தார்க்கு நிரயத் துயரையே தருகின்ற நின் படை வெள்ளமானது, நாற்றிசையும் பரந்தபடியாகப் போர்மேற் கொண்டு செல்லும். சென்று, தாம் ஆடிக் குறிகண்ட கழங்கினது செய்தியாலே உள்ளம் உரம் அழிந்தாராய்த், தத்தம் அகநகரிடத்தே செயலற்றபடி தங்கியிருக்கும் மன்னர்களின் சுற்றமாகிய படையணிகளை அழிக்கும். அங்ஙனம் அழித்து, நீதான் கைக்கொள்ளக் கருதிய பகைநாட்டினிடத்தே, ஓர் யாண்டுக் காலம் கழியும் வரையிலும் நின் படை தங்கியிருக்கும். அக்காலத்தே, போர் முனைப்பட்ட பகைவரின் ஊர்களைத் தீப்பரவக் கொளுத்தி அழித்தலையும் அது செய்யும். அணுகுதற்கரிய சீற்றத்தோடும் அவ்வாறு தீயிட்டுக் கொளுத்துதலாலே உயர்ந்து எழுந்த நெருப்புச் சுடர்கள், காற்று மோதலினாலே கொடிவிட்டு மேலெழும் நிறம் அமைந்த புகையானது பிசிராக உடைந்து கெட, இடங்கள் எல்லாம் தீவாய்ப்பட்டு வெந்து அழிவெய்தும். அங்ஙனமாக, வெந்தழிந்த ஊர்களைப் போலவே, தீக்கொளுவாத இடங்களையும் உருக்குலையுமாறு நின் படை அழியச் செய்யும். இவ்வாறு, தம் பழைய அழகான தன்மை எல்லாமே அழிந்துபட்ட இடமகன்ற ஊர்களையும்-

வெண்ணிறப் பூக்களோடும் காணப்படுகின்ற வேளைச் செடிகள் விளங்கவும், பசுமையான சுரைக் கொடிகள் தழைத்துப் படர்ந்திருக்கவும், பீர்க்கங் கொடிகள் மேலேறிப் படர்ந்திருக்கவும், வேரோடுங் காய்ந்து அழிந்துபோன செங்காந்தட் செடிகள் நீர்ச்சால்களிடத்தே நிறைந்திருக்கவும் விளங்கும், புலவு நாற்றமுடைய வில்லாலே உயிர்க் கொலை செய்யும் புல்லிய கள்வர்கள் தங்கியிருக்கும், புல்லே இலையாக வேயப்பெற்ற பாழ்வீடுகளே உள்ள ஊர்களையும், அவை எல்லாம் உடையவாயின-