பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

9



“யான் செய்த தவறு என்னை வாட்டுகிறது; மனம் உளைகிறது. யான் சூது ஆடியதால்தானே இந்தத் தீதுகள் வந்து சேர்ந்தன; அரசர்களில் என்னைப் போல் யாராவது இப்படிச் சூது ஆடிக் கேடுகளை விளைவித்துக் கொண்டவர்கள் இருக்கின்றார்களா?” என்று கேட்டான்.

அவனுக்கு ஆறுதல் கூற வியாசன் “மன்னர்கள் இருக்கிறார்கள்; சூதாடுவது கேடு தருவதுதான்; என்றாலும் அதனை மேற்கொண்டு அழிந்தவர்கள் உனக்கு முன்பும் இருந்திருக்கிறார்கள். நீ செய்தது புதிது அன்று; வருந்தாதே” என்று கூறினான்.

மேலும் அவனுக்கு ஆறுதல் கூற நளன் கதையைக் கூறத் தொடங்கினான். கலியால் விளைந்த கதை இது; நளன் என்பவன் உன்னைப் போல் நாடு இழந்தான்; இந்தக் கேடுகள் நிகழ்வதற்குக் கலியன்தான் காரணம். விதி வலிமையுடையது; அதனால் ஏற்பட்ட பாதிப்பு இது” என்று கூறினான்.

தருமன் நளன் கதையைக் கேட்பதில் ஆர்வம் காட்டினான். ‘பாரதம்’ நிகழ்வதற்கு முன் தோன்றிய கதை என்பது இவர்கள் பேச்சுரையால் வெளிப்பட்டது.

தன் வாழ்வைப் போலவே நளன் கதை அமைந்திருப் பது கண்டு மன ஆறுதல் பெற்றான். நளன் தமயந்தியை வைத்துச் சூதாடவில்லை; தருமன் அவ் வகையில் நெறி பிறழ்ந்து விட்டான் என்றுதான் கூற முடியும்.

மனைவி தன் உடைமை என்ற தவறான கருத்தே தருமனைத் தவறு செய்யத் தூண்டியது. நளன் தன் காதலியை மதித்தான்; அவள் தனக்கு உரியவள்; உடைமை யள் அல்லள்; இந்த வேறுபாட்டை அறிந்து செயல்பட்டான்.

இனி நளன் கதையை வியாசன் கூறத் தொடங்கினான்.