பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

135

அனைத்து மலங்களையும் உட்கொண்டு மேலும் மேலும் புனிதமாகிறது. புனிதமாகும், புனிதமாக்கும் மாட்சிமை உடையது. அதுவே முழு முதற்குலம்.”

“பின் பிரும்மகுலம், கூடித்திரிய குலம் என்றெல்லாம் எப்படி வருகிறது?.”

“குழந்தாய், குலங்களை விளைநிலம் தோற்றுவிப்பதில்லை. பேராசை தோற்றுவிக்கிறது. காமம், குரோதம், லோபம் ஆகிய புன்மைக் குணங்கள் தோற்றுவிக்கின்றன. இந்தப் புன்மைக் குணங்களால் ஆண் விளை நிலத்தை அரவணைக்காமல் ஆக்கிரமிக்கிறான். சுயநலங்களும் பேராசையும் இரண்களரியும் இரத்தம் பெருகும் கொடுமைகளும் விளையக் காரணமாகின்றன.

என் செல்வமே, இந்த இடத்தில் அகங்கார ஆதிக்கங்களும் அடிமைத்தனத்தின் சிறுமைகளும் இல்லை. இங்கே மிகப்பெரிய மதில் சுவர்கள் இல்லை. காவலுக்கு என்ற பணியாளரும் இல்லை. எம்மிடம் உள்ள செல்வங்களை யாரும் கவர்ந்து செல்ல முடியாது. அச்செல்வங்கள் பலருக்கும் பயன்படுவதால் மேலும் பெருகக் கூடியவை. நீ இங்கு நலமாக இருப்பாய்; உன் உதரத்தில் கண்வளரும் உயிர். இந்தக் குடிலை மட்டுமல்ல; இந்த வனத்தையே பாவனமாக்கட்டும். துன்ப நினைவுகள் இங்கே அன்பின் ஆட்சியில் அழிந்து போகும்.”

உண்மையிலேயே இந்தவனம், இங்கு வாழும் மக்கள், விலங்குகள், அனைத்துமே ஒர் அபூர்வமான இசையை அவளுள் இசைக்கின்றன. யாவாலி ஆசிரமத்தில் இருந்து பிள்ளைகளும், பெண்களும் வருகிறார்கள். சத்திய முனிவர் தீர்த்த யாத்திரை சென்று இருக்கிறாராம். உழுநிலங்களில் அவர்கள் தானியம் விளைவிக்கிறார்கள். மரங்களில் பரண் கட்டிக் கொண்டு தானியங்களைக் கொதத்த வரும் பறவைகளை விரட்டுகிறார்கள். ஆனால் அடித்து வீழ்த்துவதில்லை.

அடுத்தநாள் அவர்கள் அருகிலிருந்த ஒர் அருவிக்குநீராடச் செல்கிறார்கள். வழியெலாம் மூலிகைகளின் நறுமணம்