பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

37



அவளுக்கே உரிமையாகியது; பகிர்ந்து கொள்ளவில்லை; யாருடனும் பகரவும் இல்லை.

அவள் மன மயக்கம்; அதன் விளக்கம் அதை எப்படிக் கூறுவது? மயங்கினாள்; நெளிந்தாள்; மனம் நடுங்கினாள்; வெம்மையுற்று வருந்தினாள். அங்கும் இங்கும் வறிதே உலாவினாள். பின் செய்வது அறியாது சோர்வு கொண்டாள். துயில முயன்றாள். துயில் பெறாது கண்கள் நீர் கடை சோர நின்றது.

அந்த இரவு அவளுக்குக் கடுமையாக இருந்தது. பொழுது விடிந்தால் அவள் அழுது விடிவது நிற்கும் என்ற நிலை ஏற்பட்டது.

யார் தடுத்தாலும் பொழுது தோன்றுவதை நிறுத்த முடியாது. அது வரத்தான் செய்யும். மேற்கே சாய்ந்தவன் கிழக்கே தலை காட்டினான். இது ஒரு அற்புதக் காட்சிதான். மறைவது ஒர்இடம்; தோன்றுவது மற்றும் ஒர் இடம்.

கதிரவன் ஒளி அது காலைப் பொழுது என்பதை அறிவித்தது. அந்தணர்கள் விழித்து எழுந்தனர். அவர்கள் காலை வணக்கம் கதிரவனில் தொடங்கியது. அது அவர்கள் தேசிய வழிபாடு. அவர்கள் காலை வழிபாடு. அவர்கள் கரம் குவிந்தன. குமுத மலர்கள் வாய் திறந்து கிடந்தவை. இப்பொழுது வாயடங்கின. பேச முடியாமல் சிலர் வாய் மூடிக் கொள்வது போல் அவையும் மவுனம் சாதித்தன. கதிரவன் ஒளி அதற்குக் குவிவு உண்டு பண்ணியது. அதனை அடக்கி வைத்தது; கரங்குவித்தவர் அவர்கள் மறையவர் எனப் பேசப் பட்டனர். குமுதங்கள் குவிவு பெற்றன.

மலர்ச்சி பெற்றன என்று கூறக் கூடியவை தாமரை, மற்றும் இந்த உலக மாந்தர் கண் விழித்தனர்; உலகம் அவர்களுக்காகக் காத்துக் கிடந்தது. இரவு எல்லாம் அரவு