7
பதினெட்டாவது கலைகளின் தாய்ப் பகுதி. இங்கே பல கலைகளின் தாயாக இருக்கிற ஒரு கலையின் சிறப்பைப் புரிந்து கொள்ளலாம்.
இன்னும் மூன்று பகுதிகளே உள்ளன. அடுத்த பத்தொன்பதாம் பகுதி கூத்துப் பகுதியாக உள்ளது. கூத்து என்றால் தெருக் கூத்து அன்று. தில்லைக் கூத்தனது நடனக் கலையை-நாட்டியக் கலையை இங்கே காணலாம்.
அடுத்தது சிறு கதைப் பகுதி. இவ்வளவு நேரம் என்னென்னவோ பார்த்தறிந்து வந்தவர்கட்குக் களைப்பு தீர, சுவையான ஒரு சிறு கதை சொல்லப்படின் மகிழ்ச்சியாக இருக்கும் அல்லவா? அந்த வாய்ப்பு இந்த இருபதாவது, பகுதியில் உண்டு.
இன்னும் எஞ்சியிருப்பது ஒரே ஒரு பகுதிதான். போட்டி விளையாட்டுப் பகுதிதான் இருபத்தோராம் பகுதி. போட்டி விளையாட்டைக் காண எவருக்கும் ஆர்வம் இருக்கும்தானே! இந்தப் பகுதியில், சுவையான ஒருவகை விளையாட்டுப் போட்டியைக் கண்டறிந்து மகிழலாம். இதோடு கண்காட்சி நிறைவுறுகிறது.
தமிழ் ஆர்வம் நிரம்பிய தக்கோர்களே! கருத்துக் கண்ணால் கண்டறியக் கூடிய இந்த இருபத்தொரு பகுதிக் காட்சிகளையும் நீங்கள் கண்டறிவதற்குத் துணைபுரியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது பற்றிப் பெரிதும் மகிழ்கிறேன்-பெருமைப் படுகிறேன். நன்றி. வணக்கம்.