22
கோடுகளும் கோலங்களும்
"பரவாயில்லை. இப்படியே இருக்கட்டும்.”
"இது எதுக்கு அக்கா?”
"நெருக்கமாயிருந்தா, காத்துப் போக, நல்லா வளர இடம் இருக்காது. மனுஷங்களைப் போல பயிருக்குக் காத்து வேணுமில்ல?”
விருவிரென்று வேலை நடக்கிறது. வெயில் விழுவது தெரியாமல் குளிர் சுமந்த சூழல். உற்சாகம்...
சாந்தி... பத்துப் படித்த பெண். தோற்றம் பார்த்தால் கழனி வேலை செய்பவள் என்று சொல்ல மாட்டார்கள். புருசன் ஏதோ போட்டோக் கடையில் உதவியாளனாக இருக்கிறானாம். கொல்லை மேடு என்று சொல்லும் மானாவாரி பூமிதான் அரை ஏகரா இருக்கிறதாம்.
"தண்ணி இருந்திச்சின்னா, நாங் கூட உடனே செஞ்சி பாதுடுவ. எங்க நாத்துனாருக்கு அரைக் காணி இருக்கு. அது வேப்பேரில டீச்சரா, இருக்கு. அவ மச்சான் பாக்குறாரு. அவங்ககிட்டக் கேட்டு பயிரு வைக்கணுமின்னு ஆசை...” என்று சொல்கிறாள்.
"ஆயாதா முத நாத்த வச்சிருக்கு. அது வளரட்டும்... பாப்பம். கன்னிப்பனில்லாம போனா இந்தப் பயிர் கூட வைக்கிறதுக்கில்ல..”
"அவுரு உங்க சொந்தக்காரரா அக்கா?”
“சொந்தத்துக்கு மேல. பாட்டிக்கு மக வயித்துப் பேரன். அம்மா அப்பா ரெண்டு பேரும் செத்துட்டாங்க. ஏழெட்டு வயசுப் பையனா, இங்க ஆயி வந்தாக கூலி வேலை செஞ்சே காப்பாத்தியிருக்காங்க. எங்கூட்டுக்காரருக்குத் தா பயிரு வேலையில் நாட்டமில்ல. பன்னண்டு வயசிலேந்து உழவோட்டுவான், சேடை போடுவா, மாட்ட அவுத்திட்டுப் போயி, கட்டி, எல்லாம் அவந்தா.”
“படிக்கலியா?”