பக்கம்:தமிழ் அங்காடி.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  283


          பால்வளை தெரிந்த பகுதிப் பண்டமொடு
          கூலம் குவித்த கூல வீதியும்
          காழியர் கூவியர் கள்நொடை யாட்டியர்
          மீன்விலைப் பரதவர் வெள்ளுப்புப் பகருநர்
          பாசவர் வாசவர் பல்கிண வினைஞரோடு
          ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்...” (9-27)

(காழியர் = பிட்டு வாணிகர். கூவியர் = அப்பம் சுடு வோர். பாசவர் = வெற்றிலை விற்பவர். ஒசுநர் = எண்ணெய்விற்பவர்.) என இன்னும் நீளமாக இளங்கோ பாடிச் சென்றுள்ளார். சீனம், அரபு நாடுகள், கிரேக்கம், எகிப்து, உரோம் முதலிய வெளி நாட்டார்கள் யவனர் என்றும் சோனகர் என்றும் குறிப்பிடப்படுவர்.

மேற் காட்டியுள்ள பாடல் பகுதியைக் கொண்டு, புகார் நகரில் நடைபெற்ற வணிக வளத்தைத் தெளியலாம்.

விற்பனைக் கொடி

பல்வேறு நாடுகளிலிருந்து கப்பல்களின் வாயிலாகப் பல்வேறு பொருள்களைக் கொண்டு வந்த வணிகர்கள், கடல் கரையில் உள்ள வெண் மணல் பகுதியில் பொருள்களைப் பரப்பி விற்பனை செய்கின்றனர். ஒவ்வொரு பொருளையும் அறிவிக்கும் - அறிவிப்புக் கொடிகளை அவ்வப் பொருள்கள் குவிக்கப்பட்டிருக்கும் பகுதியில் நட்டு அவை விற்பனை செய்யப்படுகிறதாம்.

          “கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்
          வேலை வாலுகத்து விரிதிரைப் பரப்பில்
          கூல மறுகில் கொடியெடுத்து நுவலும்
          மாலைச் சேரி மருங்கு......” (130-133)

என்பது பாடல் பகுதி. இந்தக் காலத்தில் வணிகர்கள் சிலர், அகல - நீள வாட்டமுள்ள துணியில் எழுதி விளம்பரப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/285&oldid=1204509" இலிருந்து மீள்விக்கப்பட்டது