பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேய்கள் உலகம்

49


மீண்டும் வேண்டியபோது, பேய்கள் யாவும் அவற்றைக் காட்ட வேண்டாமென்று முறையிட, அவ்வாறே வித்தை காட்டல் நிறுத்தப்பெறுகின்றது.

பேய்கள் குறை இரத்தல்

எல்லாப் பேய்களும் ஒன்று திரண்டு வந்து காளி தேவியிடம் தம் பசிக்கொடுமையைக் கூறி அதைப் போக்குமாறு வேண்டுகின்றன.

சாவத்தால் பெறுதுமோ சதுமுகன்றான்
    கீழ் நாங்கள் மேனாள் செய்த
பாவத்தால் எம்வயிற்றில் பசியை வைத்தான்
    பாவியேம் பசிக்கொன் றில்லேம்[1]

[சாவம்-சாபம்; சதுமுகன்- நான்முகன்]

என்று பேய்கள் தம் நிலையைத் தெரிவிக்கின்றன. தம்முடைய மூக்கின் அருகே வழு நாறுவதாலும், முடைநாறுவதாலும் உதடுகள் துடிக்கும்படி ஈக்கள் மொய்ப்பதாலும் அவற்றை நன்னி மித்தங்களாகக் கொண்டு உயிர் வாழ்ந்திருப்பதாக உரைக்கின்றன.

அப்பொழுது இமயத்தினின்றும் போந்த முதுபேய் தான் கலிங்க நாட்டின் வழியாக வருங்கால் அங்கு கண்ட சில தீய நிமித்தங்களைக் கூறுகின்றது. ஆண் யானைகளுக்குக் கொம்பு முறிதல், பெண் யானைகளுக்கு மருப்புக்கள் முளைத்தல், ஒளி வீசி எரியும் விளக்குகள் கறுத்து எரிதல், பருவமுகில்கள் செங்குருதிகளைப் பெய்தல், முரசங்கள். தாமே முழங்குதல், இரவில் இந்திரவில் தோன்றுதல், ஊரிலுள்ள இல்லங்களில் கோட்டான்கள் தோன்று-


  1. தாழிசை -216