உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்


தங்களுக்கும் அதுபோல் தயார் செய்து கொடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். கிளின் மார்டின் இப்படியே சில நாட்களுக்குள் பட்டம் தயாரிப்பதில் நல்ல தேர்ச்சி பெற்றுவிட்டான். ஆனால், அவன் மனமோ அத்துடன் திருப்தி அடைந்துவிடவில்லை. தாயார் கண்ட கனவைப் நினைவாக்கச் செய்யவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான்.

கிளின் மார்டின் பெரியவனான பிறகு குடும்பத்தைக் காப்பாற்றும் பொருட்டு வேலைக்கு போக வேண்டியவரானார். போர்டு மோட்டார் கம்பெனியிலும் மற்றும் சில கம்பெனிகளிலும் வேலைக்கு அமர்ந்தார். மோட்டார் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்த பிறகு கிளின் மார்டின் மனம் இயந்திர சாதனங்களில் ஈடுபட்டது. இயந்திர சாதனத்தின் மூலம் தரையில் எப்படி பிரயாணம் செய்கிறோமோ, அதே போல் ஆகாயத்திலும் பிரயாணம் செய்யலாம் என்று நம்பிக்கை கொண்டார். அதைக் கொண்டு, அவர் பகல் பூராவும் கம்பெனி வேலை செய்வார். இரவு நேரங்களில் தம்வீட்டில் ஆகாயத்தில் பறக்கும் இயந்திரத்தைப் பற்றிய ஆராய்ச்சி செய்வார். அவருக்கு உதவி செய்ய அவருடைய தாயார் தான் இருந்தார். மகன் தன் கனவை நினைவாக்கச் செய்யப் போகிறான் என்ற எண்ணத்தில் தாயார் பூரிப்படைந்திருந்தார்.