பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77

இத்தகைய பெரும் புலவர் அவர்கள், இருபது வயதுடைய என்னை நோக்கி,“தம்பி, இந்தப் பயணத்தில் நீ சிறிது சோர்வாகக் காணப்படுகிறாயே! காரணம் என்ன” என்று வினவினார்கள். இரண்டு திங்கள் இடைவெளியில் பெற்றோர் இருவரையும் இழந்துவிட்ட இரங்கத்தக்க எனது நிலையை யான் அவர்கட்குத் தெரிவித்தேன். உடனே புலவர் அவர்கள் எனக்குத் தக்க ஆறுதல்கூறி, “உனக்கு இப்போது விடுமுறைதானே! இந்த விடுமுறைக் காலத்தில் என்னுடனேயே இரு” என்று பணித்தார்கள். அவ்வாறே நான் அவருடனே இருந்தேன். அவர் சொற் பொழிவிற்காகச் சென்ற பல ஊர்கட்கு அவருடனே யானும் சென்றேன். அவர்தம் சொற்பொழிவின் தலைப்புகள் பெரும்பாலும் கம்பராமாயணத்திலிருந்தே கொடுக்கப்பட்டன. சொற்களைப்பொருட்கவையுடன் நகைச்சுவையும் கலந்து பேசுவதில் அவர்கள் மிகவும் வல்லவர்கள். சொற்சுவை, பொருட்சுவை, நகைச்சுவையுடன், ஆழமான கருத்தும் கொண்ட அவர்தம் கம்பராமாயணச் சொற்பொழிவுகளைக் கேட்ட யான் கம்பனிடத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டேன். எனக்கு ஆழ்ந்த அறிமுகம்கிடைத்தது. நான் கம்பராமாயணச் செற்பொழிவு ஆற்றும் போதும், கம்பராமாயணப் பாடம் நடத்தும்போதும் இவ்வாறே சொற்சுவை பொருட்சுவைகளை எடுத்துமொழிய வேண் டும் என எனக்குள்ளே உறுதி பூண்டேன்.

5) அடுத்து, மகா மகோபாத்தியாய பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் அவர்களின் கம்பராமாயணச் சொற்பொழிவுகள் சிலவற்றைக் கேட்டேன். ஒருமுறை அவர்கள் தலைமையில் ‘குறிப்பினால் உணரும் கொள்கை யான்’ என்னும் கம்பராமாயணப் பாடல் தொடரைத் தலைப்பாகத் தந்து சொற்பொழிவும் ஆற்றியுள்ளேன். இலக்கியத்திற்குச் சொல் நயம் பொருள் நயம் சொல்-