பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆறாம் பத்து

201

ஒள்ளிய நெற்றியை உடையவரான சேரமானின் காதன் மகளிர் இளமையும் துணையாகும் தன்மையும் உடைய புதல்வரான நல்ல செவ்வத்தைச் சேரமானுக்குப் பெற்றுத் தந்தவர்கள். தொழில்வளமை பொருந்திய காற்சிலம்புகளையும், அடக்கத்தாலே சிறந்த ஒழுக்கத்தையும், நிறைந்த அறிவையும், தம் ஒழுகலாற்றால் உண்டாகிய கெடாத புகழையும் உடையவர்கள் அவர்கள். அவர்கள் புலவியாற் சினமுற்றுப் பார்க்கும் பார்வையினுங் காட்டில், இரந்து வந்தாரது வறுமையாற் பொலிவிழந்துபோன பார்வைக்கு மிகவும் அஞ்சுகின்றவன் சேரலாதன். நம்மைக் காத்தலை மேற்கொண்டு ஒழுகுவோனாகிய அத்தகு சிறப்பினன் அவன்!

பாணரது கையிடத்தாகிய, தாழக்கட்டிய நரம்பினைக் கைவிரலாலே மீட்டி வாசித்தலை விரும்பும் பேரியாழி னிடத்தே, பாலைப் பண்ணை எழுப்பியவாறு, குரல் என்னும் நரம்போடு ஒன்றுபட்ட இனிய இசைப்பகுதியிலே, தழிஞ்சி யென்னும் துறை பொருளாகவமைந்த பாட்டினைக் குரலெடுத்துப் பாடியபடி சென்று, அவனைக் கண்டு வருவதற்கு யாமும் செல்வோம்.

போர்க்களத்திலே தன் வெற்றி வீரர்களோடு துணங்கைக் கூத்தாடிய, வெற்றி பொருந்திய சேரமானாகிய கோமான், போரிற் புறங்கொடுத்து ஓடாத மேற்கோளைக் கொண்டவரான பகைவீரரது வலி கெடும்படியாக, அவரோடு போரிட்டு, அவரை அவர் வலிகெடும்படியாக அழித்தலினாலே பாய்ந்த அவர் குருதியானது, தான் அணிந்துள்ள பெரிய பனந்தோட்டு மாலையோடு பெரிய வீரக் கழலையும் சிவக்குமாறு துளிக்கும், புலவு நாற்றத்தைக் கொண்ட போர்க்களத்திடத்துப் பாசறைக்கண்ணே இருக்கின்றான். அவனிடம் செல்வோம். (அப்பகைவரை அழித்துப் பெற்ற செல்வங்களை அவன் நமக்கு வாரி வழங்குவான் என்பது குறிப்பு.)

சொற்பொருளும் விளக்கமும்: வகுந்து - வழி: 'வகுந்து செல் வருத்தத்து வான்துயர் நீங்க' (சிலம்பு: 14:17.); நிலத்தை ஊடறுத்து அமைந்துகிடப்பதாகலின் வகுந்து என்றனர். சில்வளை விறலி - சிலவாகிய வளைகளையேயுடைய விறலி: 'சில்வளை' இளமைப் பருவத்தார் அணிவது. சீறடி - சிறிய அடி. 'செல்லாமோ' என்றது, 'செல்வோம் வருக’ என்னும் பொருள்பட நிற்பது. கையது - கையிடத்தாகிய ; குறிப்பு முற்றெச்சம். பணிதொடை - தாழக் கட்டிய கட்டினையுடைய -