பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254

சுந்தர சண்முகனார்


கின்றான் - இல்லை - துயர் பெருகப் போகிறது. மனம் வந்தவாறு பொன்னே, கொடியே என்றெல்லாம் மெய்ம்மறந்து புகழ்கின்றான். நில விளக்காக - அதாவது - உலகில் தெய்வமாக வழிபடப் போகின்ற விளக்காகப் போகிறாள். பெண்களை வீட்டின் விளக்காகக் கூறுதல் இலக்கிய மரபு.

“மனைக்கு விளக்காகிய வாள்துதல்”

(புறநானூறு - 314)


“மனைக்கு விளக்கம் மடவார்”

(நான்மணிக்கடிகை - 105)

மனை விளக்காக இருந்த கண்ணகி உலக விளக்காக (தெய்வமாக) ஆகப் போகிறாள் என்னும் குறிப்பை நீள் நில விளக்கு என்பது கோடிட்டுக் காட்டுகிறது. மாறி வருவன் என்பதற்கு விற்று வருவேன் என்பது பொருள். மாறுதலாய் (பிணமாக) வருவேன் என்ற குறிப்பும் உள்ளது. ‘மயங்காது ஒழிக’ என்பதில் பெரிதும் மயங்கப் போகிறாள் என்னும் குறிப்பு அடங்கியுள்ளது.

கண்ணகியின் மறம்

சிலப்பதிகாரத்தில் உள்ள துன்ப மாலை, ஊர் சூழ் வரி, வழக்குரை காதை, வஞ்சின மாலை என்னும் நான்கு காதைகளிலும் கண்ணகியின் மற உணர்ச்சியையும் மறச் செயலையும் காணலாம். துன்ப மாலையில் கணவன் இறந்த செய்தியைக் கேட்ட கண்ணகியின் மறத் துன்பம் கூறப்பட்டுள்ளது. ஊர் சூழ் வழியில், கண்ணகி ஊரிலே தெருத் தெருவாகச் சூள் உரைத்துக் கொண்டு சுற்றித் திரிந்தது இடம் பெற்று உள்ளது. வழக்குரை காதையில், கண்ணகி பாண்டியனிடம் வழக்கு உரைத்து வென்று அரசனும் அரசியும் இறக்கும் அளவுக்கு மறச் செயல் புரிந்தது தெரிவிக்கப்பட்டுள்ளது. வஞ்சின மாலையில் கண்ணகி தனது இடப் பக்க மார்பகத்தைத் திருகி எறிந்து ஊரைக் கொளுத்தினமை உரைக்கப்பட்டுள்ளது.